ஜெய்ப்பூர் : இந்திய அணியின் முக்கிய வீரரான கே எல் ராகுலுக்கு அவரது உடற்தகுதி குறித்து பிசிசிஐ எச்சரிக்கை கொடுத்தும் அதை அவர் ஐபிஎல் தொடரில் பின்பற்றவில்லை. இதை அடுத்து ஐபிஎல் தொடர் முடிந்த உடன் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இரு மாதங்கள் முன்பு தொடங்கி நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது கே எல் ராகுலுக்கு காலில் தசைப் பிடிப்பு ஏற்பட்டது. இதை அடுத்து அவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் மட்டுமே பங்கேற்றார்.

அதன் பின் ஓய்வில் இருந்த அவர் அடுத்து 2024 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக களமிறங்கினார். அவர் ஐபிஎல் தொடருக்கு செல்லும் முன் அவரை பிசிசிஐ-யின் கீழ் செயல்படும் தேசிய கிரிக்கெட் அகாடமி பரிசோதித்தது. அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்க உடற்தகுதி இருப்பதாக தேசிய கிரிக்கெட் அகாடமி அறிக்கை அளித்த போதும் அவரை விக்கெட் கீப்பிங் பணிகளில் ஈடுபட வேண்டாம் என கூறியது.
ஆனால், அதை பின்பற்றாத கே எல் ராகுல் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் முதல் ஐபிஎல் போட்டியில், விக்கெட் கீப்பராக செயல்பட்டார். இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அப்போது லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் விக்கெட் கீப்பர் பணியை செய்தார்.
லக்னோ அணியில் க்விண்டன் டி காக், நிக்கோலஸ் பூரன் என இரண்டு விக்கெட் கீப்பர்கள் உள்ளனர். அவர்கள் இருவரில் ஒருவர் தான் கடந்த இரண்டு சீசன்களில் விக்கெட் கீப்பிங் பணியை செய்து வந்தனர். ஆனால், இந்த முறை கே எல் ராகுல் பிசிசிஐ எச்சரிக்கையையும் மீறி விக்கெட் கீப்பிங் பணியை செய்துள்ளார். வேறு விக்கெட் கீப்பர்கள் இல்லை என்ற நிலையில் அவர் அதை செய்திருந்தால் கூட பிசிசிஐ அதை பெரிதாக எடுத்துக் கொண்டிருக்காது.
ஏற்கனவே, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இரண்டு இந்திய அணி வீரர்கள் பிசிசிஐ பேச்சை மதிக்காமல் தங்கள் ஐபிஎல் அணியின் பேச்சை கேட்டு உள்ளூர் போட்டிகளில் ஆடாமல் ஐபிஎல் தொடருக்கு தயாராகி தங்கள் பிசிசிஐ ஒப்பந்தத்தை இழந்தனர். அதே போன்ற நிலை கே எல் ராகுலுக்கும் ஏற்படுமா? அல்லது எச்சரிக்கையுடன் அவரை பிசிசிஐ விட்டு விடுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.