ஜெய்ப்பூர் : ஹர்திக் பாண்டியா மீண்டும் பேட்டிங்கில் செய்த சொதப்பலால் மும்பை இந்தியன்ஸ் அணி பெரும் பின்னடைவை சந்தித்தது. மும்பை அணி 200 ரன்களை கடக்குமோ என பதற்றத்தில் இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஹர்திக் பாண்டியா விக்கெட்டால் குஷியானது.
ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய 2024 ஐபிஎல் தொடரின் லீக் போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் எல்லாம் 2024 ஐபிஎல் தொடரில் ரன் குவித்து தங்களை நிரூபித்து இருக்கும் நிலையில் ஹர்திக் பாண்டியா மட்டும் பேட்டிங்கில் சொதப்பி வருகிறார்.

பல போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த ஹர்திக் பாண்டியா, சில போட்டிகளில் பந்துகளை வீணடித்து அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்த நிலையில் தன் பேட்டிங் திறனை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஹர்திக் பாண்டியா ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி 4 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் களமிறங்கினார்.
அப்போது மும்பை இந்தியன்ஸ் அணி 151 ரன்களுக்கு 5 விக்செட்களை இழந்து இருந்தது. களத்தில் அதிரடி ஆட்டம் ஆடி வந்த திலக் வர்மாவுடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்த நிலையில் எப்படியும் மும்பை அணி 20 ஓவர்களில் 200 ரன்களை எட்டி விட முடியும் என்ற நிலை இருந்தது.
ஆனால், வழக்கம் போல நிதான ஆட்டம் ஆடிய ஹர்திக் பாண்டியா 10 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு பின் வந்த வீரர்கள் அனைவரும் பவுண்டரி அடிக்க வேண்டிய கட்டாயத்தில் அடித்து ஆடி வந்த வேகத்தில் அவுட் ஆனார்கள். மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த நிலைக்கு அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தான் காரணம்.