59 பந்துகளில் சதம்.. பல்தான்ஸ் பெயரைக் கேட்டாலே அடிப்பேன்.. பீஸ்ட் மோடில் மாஸ் காட்டிய ஜெய்ஸ்வால்!
ஜெய்ப்பூர் : மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 712 ரன்களை விளாசினார். இதனால் ஐபிஎல் தொடரில் ஜெய்ஸ்வால் ஆரஞ்ச் கேப் ரேசில் முன்னிலையில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ராஜஸ்தான் அணிக்காக களமிறங்கிய ஜெய்ஸ்வால், 7 இன்னிங்ஸ்களில் விளையாடி வெறும் 121 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார்.

சில போட்டிகளில் நல்ல தொடக்கம் கிடைத்தும், அதனை ஜெய்ஸ்வாலால் பெரிய ஸ்கோராக மாற்ற முடியவில்லை. 7 இன்னிங்ஸ்களிலும் ஒரு அரைசதம் கூட அடிக்காததால், பல்வேறு தரப்பில் இருந்து அவருக்கு அட்வைஸ் மழையே பொழிந்தது. இந்த நிலையில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் சேர்த்தது. இதன்பின் 180 ரன்கள் இலக்கை நோக்கி ஜெய்ஸ்வால் - பட்லர் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. வழக்கமாக ரன்கள் சேர்க்க அவசரம் காட்டும் யஷஸ்வி ஜெய்ஸ்வால், இந்த போட்டியில் நிதானமாக தொடங்கினார். 3 ஓவர்கள் வரை பேட்டை ஓங்காமல் இருந்த ஜெய்ஸ்வால், கோட்ஸி வீசிய 4வது ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசி அசத்தினார்.
தொடர்ந்து பும்ரா மற்றும் துஷாரா பவுலிங்கில் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசிய அவர், 6 ஓவர்கள் முடிவடைந்த போது 18 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்திருந்தார். அப்போது திடீரென மழை பெய்த நிலையில், ஆட்டம் 40 நிமிடங்கள் தடைப்பட்டது. மழை பெய்ததால் மும்பை அணி உடனடியாக ஸ்பின்னர்களை வைத்து அட்டாக் செய்தது. ஒரு பக்கம் முகமது நபி, மறுபக்கம் பியூஷ் சாவ்லா பவுலிங் செய்தனர்.
இதில் சாவ்லா பவுலிங்கில் பட்லர் 35 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், முகமது நபி வீசிய அடுத்த ஓவரில் சிக்சர் அடித்து அதிரடிக்கு திரும்பினார் ஜெய்ஸ்வால். அதன்பின் சாவ்லா பவுலிங்கில் பவுண்டரி அடித்த அசத்திய ஜெய்ஸ்வால், 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். அப்போது ராஜஸ்தான் ஓய்வறையை நோக்கி முத்தம் ஒன்றை பறக்கவிட்டு கொண்டாடினார்.
அதன்பின் சாவ்லா மற்றும் முகமது நபி இருவர் பவுலிங்கிலும் சிக்சர்களாக வெளுத்த ஜெய்ஸ்வால், ஹர்திக் பாண்டியா மற்றும் பும்ரா பந்துகளிலும் சிக்சர்களை பறக்கவிட்டார். இதனால் ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் 160 ரன்களை கடந்தது. அதேபோல் ஜெய்ஸ்வாலும் 90 ரன்களை கடந்திருந்தார். இதனால் சதம் அடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. கடந்த சீசனிலும் மும்பை அணிக்கு எதிராக அபார சதம் விளாசி அசத்தினார்.
ஆனால் அந்த போட்டியில் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்திருந்தது. இதனால் சதமடித்தும் சோகமடைந்ததாக கூறியிருந்தார். இந்த நிலையில் ஜெய்ஸ்வால் 99 ரன்கள் எடுத்திருந்த போது, திலக் வர்மா அட்டாக்கில் வந்தார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே ஜெய்ஸ்வால் ஒரு ரன் எடுத்து சதத்தை எட்டினார். 59 பந்துகளில் சதம் அடித்து அசத்திய ஜெய்ஸ்வாலுக்கு, இது 2வது சதமாகும். இதன் மூலமாக பேட்டிங் ஃபார்மை ஜெய்ஸ்வால் மீட்டெடுத்துள்ளார். சிறப்பாக ஆடிய அவர் 60 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.


Click it and Unblock the Notifications