IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே வேறு எந்த வீரரும் செய்யாத செஞ்சுரி சாதனை படைத்த ஜெய்ஸ்வால்
ஜெய்ப்பூர் : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சதம் அடித்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஐபிஎல் வரலாற்றில் வேறு எந்த வீரரும் செய்யாத சாதனை ஒன்றை செய்து இருக்கிறார்.
மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய இந்தப் போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழந்து 179 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்தது. ஜோஸ் பட்லர் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

மறுபுறம் அதிரடி ஆட்டம் ஆடிய ஜெய்ஸ்வால் சதம் கடந்து 60 பந்துகளில் 104 ரன்கள் குவித்தார். 9 ஃபோர், 7 சிக்ஸ் அடித்திருந்தார். இது அவரது இரண்டாவது ஐபிஎல் சதம் ஆகும். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 23 வயதிற்குள் இரண்டு சதம் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ஜெய்ஸ்வால். வேறு எந்த இளம் வீரரும் இதற்கு முன் இந்த சாதனையை செய்ததில்லை.
மேலும், அவர் அடித்த இரண்டு சதங்களுமே மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக கிடைத்துள்ளது. இதன் மூலம் ஒரே அணிக்கு எதிராக அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலிலும் இடம் பெற்று இருக்கிறார் ஜெய்ஸ்வால். இந்தப் பட்டியலில் கே எல் ராகுல் மும்பை அணிக்கு எதிராக மூன்று சதம் அடித்து முதல் இடத்தில் இருக்கிறார். கிறிஸ் கெயில், விராட் கோலி, டேவிட் வார்னர், ஜோஸ் பட்லர் ஆகியோரும் ஒரே அணிக்கு எதிராக இரண்டு முறை சதம் அடித்து உள்ளனர். அவர்களுக்கு அடுத்து ஜெய்ஸ்வால் எட்டாவது வீரராக இணைந்துள்ளார்.
2024 டி20 உலகக்கோப்பை தொடரில் ஜெய்ஸ்வாலுக்கு இடம் கிடைக்க வாய்ப்பில்லை என செய்திகள் வெளியான நிலையில் சதம் அடித்து பதிலடி கொடுத்துள்ளார் ஜெய்ஸ்வால்.


Click it and Unblock the Notifications