கவுகாத்தி : மும்பை அணியின் பும்ரா தான் தனது போட்டியாளர் என்று பஞ்சாப் அணியின் நட்சத்திர பவுலர் ஹர்சல் படேல் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி விளையாடி வருகிறது. ஏற்கனவே பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்புவோம் என்று பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரண் கூறியிருந்தார். இந்த நிலையில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் சேர்த்திருந்தது.

பஞ்சாப் அணி தரப்பில் நட்சத்திர வீரர் ஹர்சல் படேல், சாம் கரண் மற்றும் ராகுல் சஹர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த ஐபிஎல் தொடரில் 16 முதல் 20 ஓவர்களில் மட்டும் ஹர்சல் 16 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருக்கிறார். மீண்டும் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் என்பதையும் நிரூபித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் 13 போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் கேப் ரேஸில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். இதுகுறித்து ஹர்சல் படேல் பேசுகையில், இந்த பர்பிள் கேப் எனக்கும் பும்ராவுக்கும் இடையில் சீ-சா விளையாட்டாக மாறிவிட்டது. பும்ராவை தான் எனது போட்டியாளராக பார்க்கிறேன். அவரை போல் கன்சிஸ்டன்சியுடன் பவுலிங் செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
டிப்பிங் பந்துகளை வீசுவது கொஞ்சம் கடினமானது. அதுபோன்ற பந்துகளில் விக்கெட் வீழ்த்தும் போது எனக்கு மன உறுதியை அதிகரிக்கும். இந்த மாதிரியான பந்துகளை பேட்ஸ்மேன்கள் தவறவிட்டால், நிச்சயம் விக்கெட் கிடைக்கும். கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ச்சியாக பவுலிங் செய்து வர்யுகிறேன். ஆனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக என்னால் சிறந்த பவுலிங்கை வெளிப்படுத்த முடியவில்லை.
இதன் காரணமாகவே அந்த பந்துகளை ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் வீசாமல் அமைதி காத்தேன். எனது டெத் ஓவர் பவுலிங்கில் இதுவும் ஆயுதமாக மாறியுள்ளது. அதேபோல் நான் பவுலிங் செய்யும் போது பேட்ஸ்மேன்கள் ஸ்லோயர் பந்துகளுக்கு தயாராவதை புரிந்து கொள்ள முடிகிறது. இதனால் யார்க்கர் மற்றும் கூடுதல் வேகம் கொண்ட பந்துகளை வீசி சர்ப்ரைஸ் செய்கிறேன்.
கடைசி ஓவர்களில் விக்கெட்டுகளை இழக்கும் போது, ரன்கள் சேர்ப்பது கடினமாக இருக்கும். இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 10 முதல் 15 ரன்களை சராசரிக்கும் கீழாக உள்ளது. பவர் பிளேவுக்கு பின் நாங்கள் சிறப்பாக பவுலிங் செய்தோம். இந்த போட்டியில் 145 என்ற இலக்கை சேஸ் செய்து வெல்வோம் என்று நினைப்பதாக தெரிவித்தார்.