பாதி போட்டியில் வெளியேறிய விராட் கோலி.. சோகத்தில் ரசிகர்கள்.. அடுத்த மேட்ச் ஆடுவதில் சந்தேகம்?
ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மூத்த வீரர் விராட் கோலி ஃபீல்டிங்கின் போது பாதியில் வெளியேறினார். இந்தப் போட்டியில் பெங்களூரு அணி தோல்வி அடைந்த நிலையில், விராட் கோலிக்கு காலில் காயம் ஏற்பட்டு இருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
விராட் கோலி அடுத்த போட்டியில் ஆடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தற்போது பெங்களூரு அணி தான் ஆடிய ஐந்து போட்டிகளில் நான்கு தோல்விகளை சந்தித்து மோசமான நிலையில் உள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது. ஆனால், 200 ரன்கள் எடுத்திருக்க வேண்டிய இடத்தில் 183 ரன்களே எடுத்ததால் கடும் விமர்சனம் எழுந்தது. இந்தப் போட்டியில் தனது எட்டாவது ஐபிஎல் சதம் அடித்த விராட் கோலி கடைசி 5 ஓவர்களில் அதிக பவுண்டரிகள் அடிக்க முயற்சி செய்யாததே அதிக ஸ்கோர் எடுக்காமல் போக காரணம் என சில ரசிகர்கள் விமர்சனம் செய்தனர்.
15 ஓவர்களில் 129 ரன்கள் எடுத்து இருந்த பெங்களூரு அணி, கடைசி 5 ஓவர்களில் ஒரு ஓவருக்கு 15 ரன்கள் என்ற அளவில் ரன் சேர்த்து இருந்தால் 200 ரன்களை எட்டி இருக்கலாம். 3 விக்கெட்கள் மட்டுமே இழந்த நிலையில் கடைசி 5 ஓவர்களில் விக்கெட் போனாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தில் விராட் கோலி ஆடி இருக்க வேண்டும் என்பதே பலரின் வாதமாக இருந்தது.
அடுத்து சேஸிங் செய்த ராஜஸ்தான் அணி 19.1 ஓவர்களில் சேஸிங் செய்து வென்றது. விராட் கோலி ஃபீல்டிங் செய்த போது பந்தை வேகமாக தூக்கி எறிந்த போது அவரது கால்கள் பிசகியது. அதன் பின்னரும் ஃபீல்டிங் செய்த அவர் பின்னர் வலி காரணமாக மைதானத்தை விட்டு வெளியே சென்றார். இதை அடுத்து பெங்களூரு அணியின் அடுத்த போட்டியில் அவர் ஆடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications