RR vs RCB : டீமுக்கு உலை வைத்த விராட் கோலி.. 19வது ஓவரில் நடந்தது என்ன? பொங்கி எழுந்த ரசிகர்கள்
ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி எட்டாவது ஐபிஎல் சதம் அடித்து பல புதிய சாதனைகளை படைத்தார். அதே சமயம் அவரது ஸ்ட்ரைக் ரேட் மற்றும் சதம் அடிக்க வேண்டி 19வது ஓவரில் அவர் ஆடிய விதம் ஆகியவை கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் விராட் கோலி முதல் பந்தில் இருந்து கடைசி பந்து வரை களத்தில் நின்று ஆடினார்.

67 பந்துகளில் சதம் கடந்த அவர் 72 பந்துகளில் 113 ரன்கள் குவித்தார். முதல் பந்தில் இருந்து கடைசி பந்து வரை ஆட்டமிழக்காமல் இருந்த விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 157 மட்டுமே. இதற்கு காரணம் விராட் கோலி கடைசி ஓவர்களிலும் அதிரடி ஆட்டத்துக்கு மாறவில்லை. இத்தனைக்கும் பெங்களூரு அணி 3 விக்கெட்களை மட்டுமே இழந்து இருந்தது.
மேலும், 18வது ஓவரின் முடிவில் 98 ரன்கள் சேர்த்து இருந்த கோலி, 19வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்தார். அடுத்து கேமரான் கிரீன் மூன்றாவது பந்தில் ஒரு ரன் ஓடினார். பின்னர் நான்காவது பந்தில் ஒரு ரன் ஓடி தன் சதத்தை நிறைவு செய்தார் கோலி. 19வது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே எடுத்தது பெங்களூரு அணி.
இதை அடுத்து விராட் கோலி சதம் அடிக்கவே அந்த ஓவரில் நிதான ஆட்டம் ஆடியதாக விமர்சனம் எழுந்தது. கேமரான் கிரீன், விராட் கோலிக்கு விட்டுக் கொடுத்து ஆடியது போலத் தான் இருந்தது. அதிரடி பேட்ஸ்மேனான கிரீன் 6 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார்.
பெங்களூரு அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது. ரசிகர்களும் பலரும் இந்த ஸ்கோர் போதுமானதல்ல என்ற விமர்சனத்தை முன் வைத்தனர். 2024 ஐபிஎல் தொடரில் 200 ரன்கள் என்பது சர்வ சாதாரணமான ஒன்றாக இருக்கும் நிலையில் அதை நோக்கி விராட் கோலி ஆடி இருக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications