சென்னை: சிஎஸ்கே வரலாற்றில் எந்த இளம் வீரருக்கும் ரூ.8.40 கோடி கொடுத்து வாங்கியதில்லை என்றும், இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர்ஸ்டார் வீரராக சமீர் ரிஸ்வி இருப்பார் என்று சென்னை அணி சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் மினி ஏலத்தில் சென்னை அணி தரப்பில் 20 வயதே ஆகும் சமீர் ரிஸ்வியை ரூ.8.40 கோடி கொடுத்து ஏலத்தில் வாங்கியது. ஐபிஎல் மினி ஏலத்தை பொறுத்தவரை அம்பாதி ராயுடுவின் இடத்தை நிரப்புவது தான் சிஎஸ்கே அணி நிர்வாகத்தின் முதன்மை நோக்கமாக இருந்தது. அதனை வெளிநாட்டு வீரர் டேரல் மிட்செலை ரூ.14 கொடுத்து வாங்கியதன் மூலமாக நிரப்பியதாக பார்க்கப்பட்டது.

ஆனால் இந்திய அணிக்காக ஆடாத சமீர் ரிஸ்வியை பல்வேறு அணிகளுடன் போட்டிப்போட்டு ரூ.8.40 கோடிக்கு சிஎஸ்கே அணி வாங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் கடந்த சில ஆண்டுகளாக சிஎஸ்கே அணி நிர்வாகம் அனுபவ வீரர்களை வாங்குவதிலேயே குறியாக இருந்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் இளம் வீரர்களை ஒப்பந்தம் செய்வதில் தீவிரம் காட்டியது.
கடந்த ஆண்டு ஏலத்தின் போதே ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், நிஷாந்த் சிந்து, ஷேக் ரஷீத் ஆகியோரை வாங்கி தக்க வைத்து கொண்டது. தற்போது சமீர் ரிஸ்வியை வாங்கியதன் மூலமாக சிஎஸ்கே அணி நிர்வாகம் எதிர்காலத்திற்கான அணியையும் கட்டமைத்து வருவதாக புரிந்து கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் சமீர் ரிஸ்வியை ஏலத்தில் வாங்கிய குறித்து சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் பேசுகையில், ஐபிஎல் தொடரில் ஆடி வரும் பல்வேறு அணிகளும் சமீர் ரிஸ்வியை வாங்குவதில் தீவிரம் காட்டின. அவரை வாங்க வேண்டும் என்று ஏலத்திற்கு முன்பாகவே முடிவு செய்திருந்தனர் என்றே சொல்லலாம். இதனால் சிஎஸ்கே அவரை வாங்கியதில் கொஞ்சம் அதிர்ஷ்டமும் உள்ளது. சிஎஸ்கே அணிதரப்பில் ராயுடுவுக்கான மாற்று வீரரை வாங்குவதில் தான் கவனம் இருந்தது.
சிஎஸ்கே அணியின் வரலாற்றில் அனுபவமில்லாத வீரர்களுக்கு இவ்வளவு பெரிய தொகை கொடுத்து வாங்கியதில்லை. அதனால் நாங்கள் இளம் வீரரை வாங்கலாம் என்று முடிவு செய்தோம். சிஎஸ்கே அணி வாங்கியதால் நான் இதனை சொல்லவில்லை. ஆனால் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டார் வீரராக சமீர் ரிஸ்வி வருவார். அதற்கான அனைத்து வாய்ப்புகள் உள்ளதாக நினைக்கிறேன். கடந்த ஆண்டிலேயே ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து மற்றும் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் உள்ளிட்டோரை வாங்கினோம்.
இவர்களுடன் சமீர் ரிஸ்வி இணைந்திருப்பது சிஎஸ்கே அணி எதிர்காலத்திற்கு சிறந்ததாக கருதுவதாக தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த கேப்டனுக்கான ரேஸில் ஜடேஜா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருக்கும் நிலையில், அவர்களால் கையாள கூடிய இளம் வீரர்களை சிஎஸ்கே அணி நிர்வாகம் வாங்கியுள்ளது. அதேபோல் சிஎஸ்கே அணி சமீர் ரிஸ்வியை வாங்கியதற்கு பின் தமிழ்நாடு அணிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி தொடரில் அவர் தனி வீரராக ருத்ர தாண்டவம் ஆடியது மிக முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.