இனி வீட்டுல தான் உட்காரணும்.. ஐபிஎல் டீமை நம்பி ஏமாந்த ஸ்ரேயாஸ் ஐயர்.. சோலியை முடித்த பிசிசிஐ
மும்பை : தனது ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியன் பயிற்சி முகாமில் பயிற்சி செய்த காரணத்துக்காக ஸ்ரேயாஸ் ஐயரை பழி வாங்கி இருக்கிறது பிசிசிஐ.
இந்திய ஒருநாள் அணி மற்றும் டெஸ்ட் அணியில் இடம் பெற்று வந்த ஸ்ரேயாஸ் ஐயர், இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியுடன் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின் அவரை உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி ட்ராபியில் ஆடுமாறு இந்தியா அணி நிர்வாகம் கூறியது.

ஆனால், ஸ்ரேயாஸ் ஐயர் தனக்கு முதுகு வலி இருப்பதாகக் கூறி ஓய்வில் இருந்தார். எனினும், பிசிசிஐ கட்டுப்பாட்டில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமி அவரை சோதித்த பின் அவருக்கு எந்த பிரச்னையும் இல்லை என அறிக்கை அளித்தது. அதனால், கோபமடைந்த பிசிசிஐ, இனி அனைத்து பிசிசிஐ ஒப்பந்த வீரர்களும் ரஞ்சி ட்ராபியில் ஆட வேண்டும் என அறிக்கை வெளியிட்டது.
அப்போதும் தனது மாநில அணியான மும்பை அணிக்காக ரஞ்சி தொடரில் பங்கேற்காமல், முதுகு வலி காரணமாக பயிற்சியில் மட்டுமே ஈடுபட முடிவு செய்தார். அவருடைய ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர்கள் அவருக்கு பயிற்சி அளித்தனர். இதை அறிந்த பிசிசிஐ கோபத்தின் உச்சிக்கே சென்றது. அவரது பிசிசிஐ ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
அதன் பின் சுதாரித்த ஸ்ரேயாஸ் ஐயர் மும்பை அணிக்காக ரஞ்சி ட்ராபி தொடரின் அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டியில் வலியுடன் பங்கேற்றார். அப்படியாவது தனது பிசிசிஐ ஒப்பந்தம் மீண்டும் நீட்டிக்கப்படும் என அவர் நினைத்தார். ஆனால், சமீபத்தில் நடந்த பிசிசிஐ கூட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயரின் ஒப்பந்தத்தை நீட்டிப்பதை குறித்து பிசிசிஐ எதுவும் பேசவில்லை. அதே சமயம், ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதில் அணியில் இடம் பெற்ற சர்ஃபராஸ் கானுக்கு பிசிசிஐ ஒப்பந்தம் அளிக்கப்பட்டது.
ஸ்ரேயாஸ் ஐயர் ரஞ்சி கோப்பையில் ஆடியதால் அவருக்கு மீண்டும் ஒப்பந்தம் நீட்டிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு ஒப்பந்தம் அளிப்பது குறித்து அந்த கூட்டத்தில் யாருமே பேசவில்லை. அதற்கு காரணமே ஸ்ரேயாஸ் ஐயர் பிசிசிஐ பேச்சை மதிக்காமல், அவரது ஐபிஎல் அணியை நம்பி அவர்களுடன் பயிற்சி செய்தது தான் என கூறுகின்றனர்.
2024 ஐபிஎல் தொடர் முடிந்த உடன் 2024 டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில், அந்த தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடம் அளிக்கப்படாது எனவும் கூறப்படுகிறது. ஐபிஎல் அணியை நம்பி பயிற்சி செய்ய சென்றதற்கு இப்படி ஒரு தண்டனை அளித்து ஸ்ரேயாஸ் ஐயரை தவிக்க விட்டுள்ளது பிசிசிஐ.


Click it and Unblock the Notifications