சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த போட்டி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் நடைபெற உள்ளது. இதற்கு முன் டெல்லி கேபிடல்ஸ் அணியுடனான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி அடைந்து இருப்பதால் ஹைதராபாத் உடனான போட்டி முக்கியமான ஒன்றாக மாறி இருக்கிறது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது முதல் மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. எனவே, அந்த அணி சிஎஸ்கே-வை விட அதிக அழுத்தத்தில் இந்தப் போட்டியில் பங்கேற்கும். ஹைதராபாத் உப்பல் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறுவது அந்த அணிக்கு சாதகமான ஒன்றாக இருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு சிறிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் முஸ்தாபிசூர் ரஹ்மான் வங்கதேசம் கிளம்பிச் சென்றுள்ளார், அவர் அடுத்த வாரம் தான் மீண்டும் சிஎஸ்கே அணியுடன் இணைவார் என கூறப்படுகிறது. இவர் தான் சிஎஸ்கே அணிக்கு இந்த ஆண்டு இதுவரை நடந்த போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தி இருந்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் 18வது ஐபிஎல் லீக் போட்டி ஏப்ரல் 5 (வெள்ளிகிழமை) அன்று நடைபெற உள்ளது, இந்தப் போட்டி இரவு 7.30 மணிக்கு துவங்கும். 7 மணிக்கு டாஸ் போடப்படும். சிஎஸ்கே அணியில் முஸ்தாபிசூர் ரஹ்மானுக்கு பதில் இலங்கை வேகப் பந்துவீச்சாளர் தீக்ஷனா அணியில் இடம் பெறக் கூடும். ஷர்துல் தாக்குர் இடம் பெறவும் வாய்ப்பு உள்ளது.
இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தால் புள்ளிப் பட்டியலில் பெரிய சரிவை சந்திக்கும். நான்காவது அல்லது ஐந்தாவது இடத்துக்கு சென்று விடும். எனவே, சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்துவது அடுத்தடுத்த போட்டிகளில் அழுத்தமின்றி விளையாட உதவும்.