ஐதராபாத் : குஜராத் அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சனை சந்தித்து ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் நட்பு பாராட்டியது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத் - குஜராத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதன் மூலம் ஐதராபாத் அணி 13 போட்டிகளில் 7 வெற்றி, 5 தோல்வியுடன் 15 புள்ளிகள் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் 3வது அணி என்ற பெருமையை ஐதராபாத் அணி பெற்றுள்ளது. ஏற்கனவே கேகேஆர், ராஜஸ்தான் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய நிலையில், தற்போது ஐதராபாத் அணியும் கால் பதித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக ஐதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் தவித்து வந்தது.
தற்போது புதிய கேப்டன் பாட் கம்மின்ஸ் தலைமையில் அசத்தலாக விளையாடி, பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது. இதனால் ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் உற்சாகமடைந்தார். நேற்றைய ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டாலும், ஐதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றதால், காவ்யா மாறன் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.
அதுமட்டுமல்லாமல் ஐதராபாத் அணியின் முன்னாள் கேப்டனான கேன் வில்லியம்சனையும் சந்தித்து நட்பு பாராட்டியுள்ளார். வழக்கமாக காவ்யா மாறன் எந்த அணிகளின் வீரர்களையும் மைதானத்தில் சந்திக்க மாட்டார். ஐதராபாத் அணியின் ஓய்வறைக்கு கூட செல்லும் பழக்கம் காவ்யா மாறனுக்கு கிடையாது. தோனி, விராட் கோலி போன்ற வீரர்களுடன் விளையாடினாலும், காவ்யா மாறன் யாரையும் சந்திக்க மாட்டார்.

ஆனால் கேன் வில்லியம்சனை சந்தித்து நலம் விசாரித்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது. ஐதராபாத் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த டேவிட் வார்னருடன் அந்த அணி நிர்வாகம் நல்ல உறவில் இல்லாத நிலையில், கேன் வில்லியம்சனுடன் நட்புறவில் இருப்பதும் பாராட்டுகளை பெற்று வருகிறது.