பிளே ஆஃப் சுற்றில் ஐதராபாத்.. மழையால் உற்சாகமான காவ்யா மாறன்.. 3 ஆண்டுகளுக்கு பின் சாதித்த SRH!
ஐதராபாத் : ஐபிஎல் தொடரில் 3 ஆண்டுகளுக்கு பின் ஐதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றில் கால் பதித்து சாதனை படைத்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 66வது போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாட இருந்தது. ஆனால் மாலை முதலே ஐதராபாத் மண்ணில் கனமழை பெய்து வந்த நிலையில், ஆட்டம் தொடங்குவதற்கு தாமதமாகும் என்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இரவு 8 மணியளவில் மழை குறைந்த நிலையில், இரவு 8.15 மணிக்கு டாஸ் போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன்பின் மைதானத்தில் இருந்து தார்பாய்கள் அகற்றப்பட்ட நிலையில், திடீரென மீண்டும் கனமழை பெய்தது.

இதன்பின் இரவு 9 மணியளவில் நடுவர்கள் மைதானத்தை பார்வையிட்ட போது, 10.30 மணிக்கு முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் மழை குறையாததால், 5 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக நடத்தப்பட வாய்ப்பில்லை என்று தெரிய வந்தது. இதன்பின் 10.15 மணிக்கு இரு அணிகளின் கேப்டன்களையும் அழைத்த நடுவர்கள், ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர்.
இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதன் மூலமாக 13 போட்டிகளில் விளையாடியுள்ள ஐதராபாத் அணி 7 வெற்றி, 5 தோல்வியுடன் 15 புள்ளிகள் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஐபிஎல் தொடரில் 2020ஆம் ஆண்டுக்கு பின் ஐதராபாத் அணி மீண்டும் பிளே ஆஃப் சுற்றில் கால் பதித்துள்ளது.

இதன் காரணமாக மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தாலும் ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் உற்சாகமாகியுள்ளார். ஏனென்றால் கடந்த 3 சீசன்களில் 3 கேப்டன்கள் மாற்றப்பட்ட போதும், ஐதராபாத் அணியால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை. ஆனால் கம்மின்ஸ் கேப்டனாக முதல் சீசனிலேயே பிளே ஆஃப் சுற்றுக்கு ஐதராபாத் அணியை அழைத்து சென்றுள்ளார்.
ஏற்கனவே கேகேஆர், ராஜஸ்தான் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், 3வது அணியாக ஐதராபாத் அணி தகுதி பெற்றுள்ளது. ஐதராபாத் அணி அடுத்த போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து விளையாட உள்ளதால், டாப் 2 இடங்களில் முடிக்கவும் வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications