சென்னை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு தொடரின் இறுதிப்போட்டி இன்று சென்னையில் நடைபெற்றது. கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்த இந்த தொடரில் இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன்களான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பல பரிட்சை நடத்தின.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இறுதிப் போட்டியில் பெரிய இலக்கை நிர்ணயித்தால், அதனை சேஸ் செய்வது என்பது மிகவும் கடினமாக இருக்கும்.

மேலும் சன்ரைசர்ஸ் அணியில் அதிரடி வீரர்கள் பலரும் இருப்பதால் இன்றைய ஆட்டத்தில் ரன் வேட்டை நடைபெறும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது. ஏனென்றால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பவுலர்கள் இன்று விக்கெட் வேட்டையை நடத்தினர். யாருமே எதிர்பாராத வகையில் கொல்கத்தா வீரர்கள் இன்று அட்டகாசமாக செயல்பட்டு சன்ரைசர்ஸ் பேட்டிங்கை நொறுக்கினர்.
மிட்செல் ஸ்டார்க் எப்போதும் டிராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்தி விடுவார் என்பதால் இம்முறை அபிஷேக் சர்மா தான் ஸ்டார்க்கின் பந்துவீச்சை அதிகமாக எதிர்கொண்டார். இந்த சூழலில் அபிஷேக் சர்மா இரண்டு ரன்களில் போல்டாகி வெளியேறினார். இந்த நிலையில் டிராவிஸ் ஹெட் இந்த தொடர் முழுவதும் அதிரடியாக விளையாடிய நிலையில் இறுதி போட்டியில் அவர் வைபவ் அரோரா பௌலிங்கில் கோல்டன் டக் ஆனார்.
இதேபோன்று ராகுல் திருப்பாதி, ஸ்டார்க் பவுலிங்கில் 9 ரன்களிலும், ஏய்டன் மார்க்கரம் 20 ரன்களிலும் தென்னாப்பிரிக்க அதிரடி வீரர் ஹென்றி கிளாசன் 16 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனால் சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங் கடுமையாக தடுமாறியது. மேலும் சபாஷ் அகமது 8 ரன்களிலும், அதிரடி வீரர் அப்துல் சமத் 4 ரன்களிலும் வெளியேற, 90 ரன்கள் சேர்ப்பதற்குள் எட்டு விக்கெட்டுகளை இழந்து சன்ரைசர்ஸ் அணி தடுமாறியது.
இறுதியில் பாட் கம்மின்ஸ் மற்றும் உனாட்கட் ஆகியோர் போராடி ரன்களை சேர்க்க,கொல்கத்தா வீரர்கள் சில கேட்ச்களை தவறவிட்டனர். உனாட்கட் 4 ரன்களில் வெளியேற, கேப்டன் பாட் கம்மின்ஸ் கடைசி வரை போராடி 24 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் 18.2 ஓவரில் சன்ரைசர்ஸ் அணி 113 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் ஐபிஎல் இறுதிப் போட்டி வரலாற்றிலே அடிக்கப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோராக இது அமைந்துள்ளது. கொல்கத்தா பவுலிங் தரப்பில் ரஸில் 3 விக்கெட்டுகளையும், ஸ்டார்க், ஹர்சித் ரானா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.