வீடியோ கேம்ஸ் ஆடிய ஹெட், அபிஷேக்.. லக்னோவை பந்தாடிய ஐதராபாத்.. கம்மின்ஸ் பர்த் டே ஸ்பெஷல் இது!
ஐதராபாத் : லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரின் 57வது லீக் போட்டியில் லக்னோ அணியை எதிர்த்து ஐதராபாத் அணி விளையாடியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 165 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக பதோனி 30 பந்துகளில் 55 ரன்களையும், பூரன் 48 ரன்களையும் சேர்த்தனர். ஐதராபாத் அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகாளை வீழ்த்தினார்.

இந்த பிட்ச் கொஞ்சம் ஸ்லோவாக இருந்ததால், லோ-ஸ்கோரிங் த்ரில்லராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐதராபாத் அணிக்காக தொடக்க வீரர்களாக களமிறங்கிய ட்ராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இருவரும், அந்த சீனெல்லாம் இன்று கிடையாது என்பது போல் ருத்ர தாண்டவம் ஆடினர். கிருஷ்ணப்பா கவுதம் வீசிய முதல் ஓவரில் 8 ரன்கள் சேர்த்தனர்.
இதன்பின் யாஷ் தாக்கூர் வீசிய 2வது ஓவரில் மட்டும் அபிஷேக் சர்மா 4 பவுண்டரிகளை விளாச, மறுபக்கம் ட்ராவிஸ் ஹெட் 3வது ஓவரில் 3 சிக்ஸ், ஒரு பவுண்டரியை விளாசினார். இதனால் 4வது ஓவரை வீச ரவி பிஷ்னாய் அழைக்கப்பட்டார். இந்த ஓவரிலும் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி அடிக்கப்பட, நவீன் உல் ஹக் வீசிய 5வது ஓவரில் 4 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸ் அடிக்கப்பட்டது.
இதன் காரணமாக அதிரடி வீரர் ட்ராவிஸ் ஹெட் 16 பந்துகளில் அரைசதம் எட்டினார். பின்னர் யாஷ் தாக்கூர் வீசிய 6வது ஓவரில் 2 சிக்ஸ், 2 பவுண்டரியை அபிஷேக் சர்மா விளாசினார். இதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 107 ரன்களை குவித்தது. இதனால் லக்னோ அணி வேறு வழியில்லாமல் பதோனியை பவுலிங் செய்ய அழைத்தது.
அந்த ஓவரில் சிக்ஸ் அடித்து அபிஷேக் சர்மா 19 பந்துகளில் அரைசதம் அடிக்க, அதன்பின் இருவரும் இணைந்து வான வேடிக்கையை நிகழ்த்தி கொண்டிருந்தனர். இதன் மூலம் 9.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 167 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது. சிறப்பாக விளையாடிய ட்ராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 89 ரன்களையும், அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 75 ரன்களையும் விளாசினர்.


Click it and Unblock the Notifications