ஐதராபாத் : லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுலை அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கடுமையாக திட்டியது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி பரிதாபமாக தோல்வியடைந்தது அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவை கோபப்படுத்தியுள்ளது. இதனால் மைதானத்திலேயே லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுலிடம் கடுமையாக நடந்து கொண்டார். இந்த வீடியோ ரசிகர்களிடையே புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

விளையாட்டில் வெற்றி, தோல்விகள் சகஜம் என்று புரிந்து கொள்ள தெரியாதவர்களால் லக்னோ அணி நிர்வகிக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதுபோன்ற விஷயங்களை சிஎஸ்கே, கேகேஆர், ஐதராபாத், ஆர்சிபி, ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி உள்ளிட்ட அணிகள் சிறப்பாக கையாண்டு வருகின்றன. அந்த ஃபார்முலாவை லக்னோ அணி பின்பற்ற வேண்டும் என்று கருத்துகள் சொல்லப்பட்டு வருகிறது.
சிஎஸ்கே, ஐதராபாத், ஆர்சிபி, ராஜஸ்தான், கேகேஆர், டெல்லி உள்ளிட்ட அணிகளின் உரிமையாளர்கள் யாரும் வீரர்களின் விஷயங்களில் கொஞ்சம் கூட தலையிடுவதில்லை. அவர்கள் அனைவரும் நிர்வாகங்களை மட்டுமே கேள்வி எழுப்பி வருகின்றனர். அதாவது சிஇஓ என்று ஒருவரை நியமித்து, அணிக்கு தேவையான விஷயங்களை உரிமையாளர்கள் செய்து கொடுத்து வருகிறார்கள்.
சிஎஸ்கே அணிக்கு காசி விஸ்வநாதன், கேகேஆர் அணிக்கு வெங்கி மைசூர், ஐதராபாத் அணிக்கு சண்முகம், ராஜஸ்தான் அணிக்கு மனோஜ், ஆர்சிபி அணிக்கு சஞ்சீவ், டெல்லி அணிக்கு கங்குலி மற்றும் பாண்டிங் உள்ளிட்டோர் பயிற்சியாளர் மற்றும் கேப்டன் ஆகியோருக்கும் அணியின் உரிமையாளர்களுக்கும் இடையில் பாலமாக இருந்து வருகின்றனர்.
இதனால் வீரர்களை அணியின் உரிமையாளர்கள் யாரும் பெரிதாக சந்திப்பதே கிடையாது. ஒரு போதும் காவ்யா மாறன், ஸ்ரீனிவாசன், ஷாரூக் கான், பார்த் ஜிண்டால் உள்ளிட்ட யாரும் வீரர்களிடம் கடுமையாக நடந்து கொண்டதே இல்லை. அதற்கு மாறாக அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி தோல்விக்கான காரணங்களை அறிந்து கொள்வார்கள்.
ஆனால் லக்னோ அணியில் சிஇஓ இல்லாததன் காரணமாக அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா நேரடியாக வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் பேசி வருகிறார். இதனால் களத்திலேயே கோபத்தை வெளிப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி நடந்து கொள்ளும் பட்சத்தில், வீரர்கள் மத்தியில் கூடுதல் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது.