தரமான கேமியோ ஆடிய ஜித்தேஷ்.. ஐதராபாத் பவுலர்களை பஞ்சராக்கிய பஞ்சாப்.. 215 ரன்கள் இலக்கு!
ஐதராபாத் : பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி வெற்றிபெற 215 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் கடைசி லீக் நாளான இன்று ஐதராபாத் அணியை எதிர்த்து பஞ்சாப் அணி களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஜித்தேஷ் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். இதன்பின் பஞ்சாப் அணி தரப்பில் அதர்வா தாய்டே - பிரப்சிம்ரன் சிங் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் சில ஓவர்கள் இருவரும் நிதானமாக ரன்கள் சேர்த்தனர்.

4 ஓவர்களில் 35 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், கம்மின்ஸ் வீசிய 5வது ஓவரில் 12 ரன்கள் விளாசப்பட்டது. தொடர்ந்து பவர் பிளேவின் கடைசி ஓவரில் 14 ரன்கள் சேர்க்க, 6 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 61 ரன்களை குவித்தது. இதன்பின் ஒவ்வொரு ஓவருக்கும் இரு பவுண்டரிகளாக விளாசி அசத்தினர். முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், சிறப்பாக ஆடிய தாய்டே 27 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.
மறுமுனையில் சிறப்பாக ஆடிய பிரப்சிம்ரன் சிங் 34 பந்துகளில் அரைசதம் அடிக்க, நிதீஷ் ரெட்டி வீசிய 12வது ஓவரில் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 20 ரன்கள் விளாசப்பட்டது. இதனால் பஞ்சாப் அணி 12 ஓவர்கள் முடிவில் 129 ரன்கள் குவித்தது. சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரப்சிம்ரன் சிங் 45 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த நட்சத்திர வீரர் ஷஷாங்க் சிங் 2 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார்.
தொடர்ந்து அதிரடியாக ஆடிய ரூசோவ் 24 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து வெளியேற, கடைசி நேரத்தில் ஜித்தேஷ் சர்மா - அஷுதோஷ் சர்மா கூட்டணி இணைந்தது. ஆனால் அஷுதோஷ் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழக்க, 19 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 195 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஓவரை வீச நிதீஷ் ரெட்டி அழைக்கப்பட்டார். இந்த ஓவரில் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 19 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய ஜித்தேஷ் சர்மா 15 பந்துகளில் 32 ரன்களை சேர்த்தார்.


Click it and Unblock the Notifications