ஐதராபாத் : ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அதிவேக அரைசதம் விளாசியது குறித்து நட்சத்திர இளம் வீரர் ரஜத் பட்டிதர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியின் வென்றதன் மூலமாக ஆர்சிபி அணி நடப்பு ஐபிஎல் தொடரில் 2வது வெற்றியை பெற்றுள்ளது. தொடர்ச்சியாக 6 போட்டிகளில் ஆர்சிபி அணி தோல்வியை சந்தித்து வந்த நிலையில், ஐதராபாத் அணியை வீழ்த்தி அசத்தி இருக்கிறது.

இந்த வெற்றிக்கு ஆர்சிபி அணியின் இளம் வீரர் ரஜத் பட்டிதர் முக்கிய காரணமாக அமைந்துள்ளார். ஏனென்றால் பவர் பிளேவுக்கு பின் ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ், பிட்சில் ஸ்லோயர் பந்துகள் எடுபடுவதை அறிந்து ஸ்பின்னர்களை அட்டாக்கில் கொண்டு வந்தார். இதனால் விராட் கோலியால் விரைவாக ரன்கள் சேர்க்க முடியாமல் திணறி வந்தார்.
அப்போது களம் புகுந்த ஆர்சிபி அணியின் இளம் வீரர் ரஜத் பட்டிதர் 19 பந்துகளில் அரைசதத்தை விளாசினார். குறிப்பாக ஐதராபாத் அணியின் முதன்மை ஸ்பின்னரான மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்சர்களை விளாசி அசரடித்தார். ஸ்பின்னர்களுக்கு எதிராக எந்த பயமும், அச்சமும் இல்லாமல் ரஜத் பட்டிதர் விளையாடியதன் காரணமாக, ஆர்சிபி அணி 206 ரன்களை குவிக்க முடிந்தது.
இதனால் ஆட்டநாயகன் விருதை ரஜத் பட்டிதர் பெற்றார். இதன்பின் ரஜத் பட்டிதர் பேசுகையில், என்னால் எந்த விஷயங்களை கட்டுப்படுத்த முடியுமோ, அவை பற்றி மட்டுமே சிந்திக்கிறேன். நான் என் வீட்டிற்கு சென்றால், வீட்டில் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளையும் சரி செய்ய முயல்வேன். அப்படிதான் பேட்டிங்கிலும் விளையாடுகிறேன். எப்போது பேட்டிங் இலக்கணத்துடன் விளையாடவே விரும்புகிறேன்.
ஸ்பின்னர்களுக்கு எதிராக எந்த திட்டமும் இல்லாமல் தான் களமிறங்கினேன். ஒவ்வொரு பவுலருக்கு எதிராகவும் சிறந்த பேட்டிங்கை விளையாட வேண்டும் என்பதே எண்ணமாக இருந்தது என்று தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பட்டிதர் மோசமான ஃபார்மில் இருந்த நிலையில், தற்போது மீண்டும் பேட்டிங் ஃபார்முக்கு திரும்பியுள்ளது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.