4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
ஐதராபாத் : ஆர்சிபி அணிக்காக குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர்களில் ஏபி டி வில்லியர்ஸ் சாதனையை இளம் வீரர் பட்டிதர் முறியடித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 41வது போட்டியில் ஆர்சிபி - ஐதராபாத் அணிகள் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி கேப்டன் டூ பிளசிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து ஆர்சிபி அணி தரப்பில் விராட் கோலி - டூ பிளசிஸ் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. ஆர்சிபி அணி தரப்பில் முதல் ஓவரை அபிஷேக் சர்மா வீசினார். முதல் பந்திலேயே விராட் கோலி பவுண்டரியுடன் தொடங்கினார்.

முதல் ஓவரிலேயே 10 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், 2வது ஓவரில் 3 பவுண்டரிகள் உட்பட 14 ரன்கள் விளாசப்பட்டது. இதனை விடவும் கம்மின்ஸ் பவுலிங்கில் 19 ரன்களை விளாச, 3 ஓவர்களில் ஆர்சிபி அணி 43 ரன்கள் சேர்த்தது. இந்த நிலையில் அதிரடியாக ஆடிய டூ பிளசிஸ் 12 பந்துகளில் 25 ரன்களிலும், தொடர்ந்து வந்த வில் ஜாக்ஸ் 6 ரன்களில் வெளியேறினார்.
இதன்பின் இளம் வீரர் ரஜத் பட்டிதர் களம் புகுந்தார். பவர் பிளே ஓவர்களுக்கு பின் விராட் கோலியின் பேட்டிங்கில் அதிரடி குறைந்த நிலையில், ரஜத் பட்டிதர் தொடக்கம் முதலே பொளந்து கட்டினார். குறிப்பாக மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்சர்களை விளாசி ரஜத் பட்டிதர் மிரட்டினார். இதனால் அந்த ஓவரில் மட்டும் மொத்தமாக 27 ரன்கள் விளாசப்பட்டது. இதனைத் தொடர்ந்தும் அதிரடி தொடர, வெறும் 19 பந்துகளில் ரஜத் பட்டிதர் அரைசதத்தை எட்டினார்.
இதன் மூலமாக ஆர்சிபி அணிக்காக குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ரஜத் பட்டிதர் 2வது இடம் பிடித்துள்ளார். இதில் 17 பந்துகளில் கிறிஸ் கெய்ல் அரைசதம் அடித்து முதலிடத்திலும், 19 பந்துகளில் ராபின் உத்தப்பா மற்றும் ரஜத் பட்டிதர் 2வது இடத்திலும், டி வில்லியர்ஸ் 21 பந்துகளில் அரைசதம் அடித்து 3வது இடத்திலும் உள்ளனர். சிறப்பாக விளையாடிய ரஜத் பட்டிதர் 20 பந்துகளில் 5 சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 50 ரன்களில் ஆட்டமிழந்தார்.


Click it and Unblock the Notifications