சென்னை : ராஜஸ்தான் அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதோடு, ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கும் ஐதராபாத் அணி தகுதிபெற்றுள்ளது.
ராஜஸ்தான் - ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான குவாலிஃபையர் 2வது போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 175 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கிளாசன் 50 ரன்களும், ராகுல் த்ரிப்பாட்டி 37 ரன்களையும் விளாசினர். ராஜஸ்தான் அணி தரப்பில் ஆவேஷ் கான் மற்றும் போல்ட் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன்பின் ராஜஸ்தான் அணி தரப்பில் ஜெய்ஸ்வால் - கோலர் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. தொடக்கம் முதலே பேட்டிங் செய்ய சிரமப்பட்ட கோலர் 16 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து வெளியேற, ஜெய்ஸ்வால் - சஞ்சு சாம்சன் கூட்டணி இணைந்தது. சஞ்சு சாம்சன் நிதானம் காக்க, ஜெய்ஸ்வால் ஃபீல்டிங்கை பயன்படுத்தி விளாசி தள்ளினார். அதிலும் புவனேஷ்வர் குமார் வீசிய 6வது ஓவரில் மட்டும் 19 ரன்கள் விளாசப்பட்டது. இதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 51 ரன்கள் சேர்த்திருந்தது.
இதனால் ராஜஸ்தான் அணியின் கைகள் ஓங்கியதாக பார்க்கப்பட்ட நிலையில், திடீரென ஷாபாஸ் அஹ்மத் அட்டாக்கில் வந்தார். ஜெய்ஸ்வால் ஸ்பின்னர்களை அட்டாக் செய்ய நினைத்து பேட்டை ஓங்க 42 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அபிஷேக் சர்மா வீசிய அடுத்த பந்திலேயே சஞ்சு சாம்சனும் 10 ரன்களில் வெளியேற, 10 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 73 ரன்கள் சேர்த்திருந்தது. இதன்பின் மீண்டும் ஷாபாஸ் அஹ்மத் வீசிய 11வது ஓவரில் ரியான் பராக் 6 ரன்களிலும், அஸ்வின் டக் அவுட்டாகியும் வெளியேறினர்.
பின்னர் வந்த ஹெட்மயர் ராஜஸ்தான் அணியை காப்பாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ 10 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து போல்டானார். வெறும் 37 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து ராஜஸ்தான் அணி தடுமாறியது. பின்னர் வந்த துருவ் ஜுரெல் ஒரு பக்கம் அதிரடியாக பவுண்டரிகளை விளாசி தள்ள, அதிகம் நம்பியிருந்த பவலும் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 52 ரன்கள் தேவைப்பட்டது.
தொடர்ந்து அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசிய ஜுரெல் 26 பந்துகளில் அரைசதம் எட்டினார். பின்னர் கடைசி ஓவரில் வெற்றிக்கு 42 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஐதராபாத் அணியின் வெற்றி உறுதியானது. கடைசி ஓவரில் 5 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட, ஐதராபாத் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் மூலம் ஐபிஎல் இறுதிப்போட்டியில் கேகேஆர் அணியை எதிர்த்து ஐதராபாத் அணி விளையாட தகுதி பெற்றுள்ளது.