SRH vs RR : கடைசி 5 ஓவரில் 70 ரன்கள்.. அஸ்வினையே பொளந்த நிதிஷ் ரெட்டி.. கிளாசன் மாஸ் சம்பவம்!
ஐதராபாத் : ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற 202 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 50வது லீக் போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்த்து ராஜஸ்தான் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் ஐதராபாத் அணி தரப்பில் ட்ராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் வழக்கம் போல் போல்ட் முதல் ஓவரை வீச வந்தார்.

முதல் பந்திலேயே ட்ராவிஸ் ஹெட் கொடுத்த கேட்சை ரியான் பராக் தவறவிட, அது பவுண்டரியானது. இதன்பின் ஆச்சரியமளிக்கும் வகையில் அஸ்வின் அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். ஏற்கனவே கிறிஸ் கெய்ல் போன்ற வீரர்களின் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தி இருக்கிறார். ஆனால் அபிஷேக் சர்மா 2வது பந்திலேயே சிக்சர் அடிக்க, அடுத்தடுத்த பந்துகளில் அஸ்வின் கம்பேக் கொடுத்தார்.
அதிரடி வீரர்களான இருவரும் நிதான ஆட்டத்தை ஆட, 4 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 25 ரன்களை சேர்த்திருந்தது. இதன்பின் ஆவேஷ் வீசிய 5வது ஓவரில் அட்டாக் செய்ய முயற்சித்து அபிஷேக் சர்மா 12 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த அன்மோல்ப்ரீத் 5 ரன்களில் வெளியேற, ஐதராபாத் அணி சிக்கலில் சிக்கியது.
இதன்பின் ட்ராவிஸ் ஹெட் - நிதிஷ் குமார் ரெட்டி இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 8 ஓவர்களுக்கு 48 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்த நிலையில், சாஹல் வீசிய 9வது ஓவரில் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரியை விளாசி ஹெட் அட்டாக்கை தொடங்கினார். மறுமுனையில் நிதிஷ் குமார் தன் பங்கிற்கு ஓவருக்கு சிக்ஸ் அடிப்பதை வழக்கமாக்கினார்.
சிறப்பாக ஆடிய ட்ராவிஸ் ஹெட் 37 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். தொடர்ந்து சாஹல் வீசிய 13வது ஓவரில் நிதிஷ் குமார் 2 சிக்ஸ், 2 பவுண்டரியை விளாசினார். இதன் காரணமாக 14 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணியின் ஸ்கோர் 123 ரன்களாக இருந்தது. தொடர்ந்து அதிரடியாக ஆட முயற்சித்த ட்ராவிஸ் ஹெட் 44 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து வெளியேற, உடனடியாக கிளாசன் களம் புகுந்தார்.
இதனிடையே சிறப்பாக ஆடிய நிதிஷ் குமார் 30 பந்துகளில் அரைசதம் அடித்த கையுடன், அஸ்வின் பந்தில் 2 சிக்சர்களை பறக்கவிட்டார். இன்னொரு பக்கம் கிளாசனும் சாஹல் பவுலிங்கில் 2 சிக்ஸ் அடிக்க, ஐதராபாத் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. கடைசி ஓவரில் 15 ரன்கள் சேர்க்கப்பட, ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 201 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய நிதிஷ் குமார் 42 பந்துகளில் 76 ரன்களை விளாசினார்.


Click it and Unblock the Notifications