நடராஜன் தரமான யார்க்கர் பவுலர்.. கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை.. ஓபனாக அறிவித்த பாட் கம்மின்ஸ்!
ஐதராபாத் : தமிழ்நாடு வீரர் நடராஜன் தரமான யார்க்கர் பவுலர் என்று ஐதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பாராட்டியுள்ளார்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்திருந்தது. சிறப்பாக விளையாடிய நிதிஷ் ரெட்டி 42 பந்துகளில் 76 ரன்களை விளாசி அசத்தினார்.

இதன்பின் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்களை மட்டுமே சேர்த்தது. கடைசி பந்தில் ராஜஸ்தான் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், புவனேஷ்வர் குமார் வீசிய பந்தில் பவல் ஆட்டமிழந்தார். இதனால் ஐதராபாத் அணியின் ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்தனர்.
இந்த வெற்றிக்கு ஐதராபாத் அணியின் நட்சத்திர பவுலர் புவனேஷ்வர் குமார் முக்கிய காரணமாக அமைந்தாலும், மிடில் ஓவர்களில் நடராஜனின் கட்டுக்கோப்பான பவுலிங் மற்றும் விக்கெட்டுகளும் காரணமாக அமைந்தது. சிறப்பாக பவுலிங் செய்த நடராஜன் 4 ஓவர்களில் 35 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதன் மூலம் பர்பிள் கேப்பையும் நடராஜன் வென்றார். இதுகுறித்து ஐதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேசுகையில், நிச்சயம் இந்த போட்டி அற்புதமான ஒன்றாக அமைந்தது. இதுதான் டி20 கிரிக்கெட். என்ன வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கும். புவனேஷ்வர் குமார் சிறப்பாக கடைசி பந்தை வீசினார். நாங்கள் மிடில் ஓவர்களில் சில விக்கெட்டுகளை எடுக்க முயற்சித்தோம்.
எங்கள் அணியின் நடராஜன் மிகச்சிறந்த யார்க்கர் பவுலராக இருக்கிறார். ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களின் தவறு காரனமாக எங்களுக்கு முக்கியமான விக்கெட்டுகள் கிடைத்தது. இந்த மைதானத்தில் சில போட்டிகளை விளையாடியுள்ளதால், 202 என்ற இலக்கை எளிதாக சேஸ் செய்ய முடியும் என்று நினைத்தேன். அதேபோல் பேட்டிங்கில் நிதிஷ் ரெட்டி சிறப்பாக விளையாடினார். ஃபீல்டிங் மற்றும் பவுலிங்கிலும் அவரால் பங்களிக்க முடிவது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications