IPL 2024 : பாவம் அந்த மனுஷன்.. கோப்பை வாங்கி கொடுத்த கேப்டன்.. டேவிட் வார்னரை பிளாக் செய்த ஐதராபாத்!
ஐதராபாத்: சமூக வலைதளங்களான ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னரை ஐதராபாத் அணி நிர்வாகம் பிளாக் செய்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக தலைமை தாங்கி கோப்பையை வென்று கொடுத்தவர் டேவிட் வார்னர். அதன்பின் 2018ஆம் ஆண்டு இறுதிப்போட்டி வரை ஐதராபாத் அணியை அழைத்து சென்றார். அதன்பின் 2021ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணி மோசமான தோல்வியை சந்தித்தது.

இதனால் ஐபிஎல் தொடருக்கு இடையிலேயே டேவிட் வார்னர் ஓரம்கட்டப்பட்டார். ஓய்வறையில் கூட இடம் கொடுக்காமல் ரசிகர்கள் மத்தியில் டேவிட் வார்னர் அமர வைக்கப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றது. இதன்பின் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். ஐதராபாத் அணியில் இருந்து விலகினாலும் ஐதராபாத் நகரம் பற்றி தொடர்ந்து பல்வேறு முறை டேவிட் வார்னர் பேசி இருக்கிறார்.
இந்த நிலையில் ஐபிஎல் மினி ஏலத்தில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஐதராபாத் அணியால் வாங்கப்பட்டார். அதேபோல் ஆஸ்திரேலியா அணியின் மற்றொரு தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் ரூ.6.8 கோடிக்கு ஐதராபாத் அணியால் வாங்கப்பட்டுள்ளார். இதனால் பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் சக ஆஸ்திரேலியா அணி வீரரான டேவிட் வார்னர், இவர்களுக்கு வாழ்த்து கூறுவதற்காக ஐதராபாத் அணியின் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு சென்றுள்ளார். அப்போது டேவிட் வார்னரை ஐதராபாத் அணி நிர்வாகம் தரப்பில் சமூக வலைதளங்களில் பிளாக் செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
இதனை அப்படியே ஸ்க்ரீன்ஷாட் எடுத்த டேவிட் வார்னர், நக்கலுடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இதனால் பலரும் ஐதராபாத் உரிமையாளரான காவ்யா மாறனை கிண்டல் செய்து வருகின்றனர். என்னதான் கருத்து வேறுபாடு இருந்தாலும், ஐபிஎல் கோப்பை வென்று கொடுத்த கேப்டனுக்கான மரியாதையை கூட ஐதராபாத் அணி வழங்கவில்லை என்று விமர்சித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications