பெங்களூர் : ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றிலே ஸ்டார் வீரர்கள் அதிரடி வீரர்கள் என நட்சத்திர பட்டாளங்களை கொண்டு இருக்கும் ஆர்சிபி அணி இதுவரை ஒரு முறை கூட ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது கிடையாது. முதல் சீசனில் இருந்து 17வது சீசன் வரை ஒரே ஒரு அணிக்காக தான் விராட் கோலி விளையாடுகிறார்.
அது ஆர்சிபிக்கு தான், இப்படி கோலி, தன்னுடைய உயிர், ரத்தம், வியர்வை சிந்தி ஆர் சி பி அணிக்காக விளையாடினாலும், அவர்களால் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை. இந்த நிலையில் என்ன செய்தால் ஆர் சி பி அணியால் கோப்பையை வெல்ல முடியும் என்பதை தற்போது பார்க்கலாம்.

முதலில் ஆர் சி பி அணிக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் தேவை அடக்கம் ஆகும்.எப்போதுமே அடாவடித்தனம் செய்பவர்களுக்கு இதுவரை எந்த நல்லதும் நடந்தது இல்லை. சாதாரண ஒரு லீக் போட்டியில் வெற்றி பெற்று கொண்டாடுவதெல்லாம் மிகவும் தவறான விஷயம். சிஎஸ்கே போட்டியில் அவர்கள் வெற்றி பெற்று கொண்டாடியதன் மூலம் இதுவே போதும் என்ற மனநிலைக்கு வந்திருப்பார்கள்.
இதன் காரணமாகத்தான் எப்போதுமே நமது இலக்கு அடையும்வரை, கொண்டாடவே கூடாது. அந்த தவறை rcb தொடர்ந்து செய்து வருகிறது. மேலும் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கண்ணியத்துடன் நடக்க வேண்டும். ஒருவேலை ரசிகர்கள் தவறு செய்தாலும் அதனை வீரர்கள் தட்டி கேட்க வேண்டும். இது எல்லாம் களத்திற்கு வெளியே நிச்சயம் தேவையான விஷயமாகும். களத்திற்குள் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்க்கலாம்.
முதலில் ஐபிஎல் கோப்பையில் வெல்ல வேண்டும் என்ற வெறியை ஆர் சி பி கைவிட வேண்டும்.ஆம் ஒரு விஷயத்தை அதீத கவனம் செலுத்தி வெறியுடன் இருக்கும் போது, தேவையில்லாத பதற்றம் உருவாகிறது. இதனால் ஏற்படும் அழுத்தத்தை ஆர் சி பி யால் சமாளிக்க முடிவதில்லை. இதனால், ஐபிஎல் கோப்பை வேண்டாம் நாம் இந்த சீசனை மகிழ்ச்சியாக விளையாடுவோம். எந்த நெருக்கடியும் இன்றி ஒருவருக்கொருவர் துணையாக ஒரு அணியாக போட்டிகளை விளையாடுவோம் என்று நினைக்க வேண்டும்.
இப்படி ஒரு கலாச்சாரத்தை அணி நிர்வாகம் தான் ஏற்படுத்த வேண்டும். எங்களுக்கு வெற்றி தேவையில்லை. இந்த சீசன் முழு சுதந்திரத்துடன் விளையாடுங்கள் என்று வீரர்களை ஊக்குவிக்க வேண்டும். இதன் மூலம் கோலி, சிராஜ் போன்ற வீரர்கள் எந்த தயக்கமும் இன்றி விளையாடுவார்கள். இரண்டாவது டி20 கிரிக்கெட் தற்போது மாறி வருகிறது. அதற்கு ஏற்ப ஆர் சி பி யும் மாறிக்கொள்ள வேண்டும்.
உதாரணத்திற்கு மும்பை, சிஎஸ்கே அணியின் வெற்றியை பார்த்தால் அவர்களுடைய வேக பந்துவீச்சில் பும்ரா, மலிங்கா, பதிரானா போன்ற வித்தியாசமான முறையில் பௌலிங் செய்யும் வீரர்கள் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு பௌலரை ஆர்சிபி தேட வேண்டும். அடுத்த சீசனுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கின்றது. அதற்குள் ஆர் சி பி அணியால் ஒரு வித்தியாசமான பவுலரை தேடி கண்டுபிடிக்க முடியும்.
இந்த இடத்தில் தான் வீரர்களை தேடும் நிபுணர்களின் பங்கு மிகவும் முக்கியம். நிலத்தில் மறைந்து கிடைக்கும் வைரத்தை தோண்டி எடுப்பதே இவர்களுடைய பணியாகும். ஆர் சி பி அப்படி ஒரு வித்தியாசமான வேகப்பந்து வீச்சாளரை கண்டுபிடிக்க வேண்டும். அவரை கண்டுபிடிப்பது மட்டுமல்லாமல் அவருக்கு துணையாக இருக்க வேண்டும். இதேபோன்று அதிரடியாக ஆடும் பேட்ஸ்மேன்களை கண்டறிந்து உன்னுடைய ரோல் இதுதான் இதை செய்தால் போதும் என்று அவர்கள் அவர்களுக்கு பிரித்துக் கொடுத்துவிட வேண்டும்.
இந்த வேலையை ஆர் சி பி தற்போது சரியாக செய்து வருகிறது. எனினும் இதில் கொஞ்சம் முதிர்ச்சி தேவை. இதேபோன்று சீனியராக விராட் கோலி பல அறிவுரைகளை கேப்டனுக்கு அணி நிர்வாகத்திற்கும் கூறினாலும், அவர்கள் எடுக்கும் முடிவில் தலையிடக்கூடாது. அறிவுரையை கூறிவிட்டு நகர வேண்டும். அதனை அவர்கள் பின்பற்றுகிறார்களா இல்லையா என்பதில் தலையிடக்கூடாது. பிறகு தங்களுடைய பலம் என்ன பலவீனம் என்ன என்பதை ஆர் சி பி புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற வகையில் மைதானத்தை மாற்றி அமைக்க வேண்டும். முன்பெல்லாம் சிஎஸ்கே ஆடுகளத்தில் சுழற் பந்து வீச்சு சாதகமாக செயல்படும்.
இதேபோன்று ஆர்சிபி அணியும் தங்களுக்கு எது சரியாக வருகிறதோ அதற்கு தகுந்தார் போல் ஆடுகளத்தை மாற்ற வேண்டும். ஐபிஎல் தொடரில் 10 அணிகளும் ஒரே மாதிரி தான் பயிற்சி செய்கிறார்கள். வீரர்களை தேர்வு செய்கிறார்கள். ஆனால் மும்பை சிஎஸ்கே அணியால் மட்டும் தொடர்ந்து வெல்ல முடிவதற்கு காரணம் என்ன? அதற்கு காரணம் அவர்கள் அணியில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் கலாச்சாரம்தான். அணியின் உரிமையாளர் எவ்வாறு வீரர்களின் நடத்துகிறார்? எவ்வளவு சுதந்திரம் தருகிறார் என்பதை பொறுத்து வெற்றி தோல்வி மாறுபடும் இதனை ஆர்சிபி புரிந்து கொள்ள வேண்டும்.