ஹர்திக் பாண்டியா அளித்த புகாரில் சகோதரர் வைபவ் பாண்டியா கைது.. இரண்டாக பிரிந்த குடும்பம்
மும்பை : ஹர்திக் பாண்டியாவின் சகோதரரான வைபவ் பாண்டியா கைது செய்யப்பட்டார். ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியாவுடன் இணைந்து "பாலிமர்" வியாபார நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார் வைபவ் பாண்டியா.
அதில் ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியா பல கோடி ரூபாய் முதலீடு செய்து இருந்த நிலையில், அவர்களுக்கு தெரியாமல் தனி பாலிமர் நிறுவனம் ஒன்றை தொடங்கி மூவருக்குமான நிறுவனத்தில் செய்ய வேண்டிய விற்பனையை தனது சொந்த நிறுவனத்தின் பெயரில் செய்து சுமார் 4.2 கோடி ரூபாய் வரை வைபவ் பாண்டியா ஏமாற்றியதாக மும்பை பொருளாதார குற்றப் பிரிவு காவல்துறையிடம் ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியா சார்பில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

2021இல் ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா மற்றும் அவர்களது பெரியப்பா மகனான வைபவ் பாண்டியா ஆகிய மூவரும் இணைந்து பாலிமர் நிறுவனத்தை தொடங்கி இருந்தனர். அதில் ஹர்திக் பாண்டியா மற்றும் க்ருனால் பாண்டியா தலா 40 சதவீதம் முதலீடு செய்து இருந்தனர். வைபவ் பாண்டியா 20 சதவீதம் முதலீடு செய்ததோடு, நிறுவனத்தை நிர்வகிக்கும் பொறுப்பும் அவரிடம் இருந்தது.
தங்கள் குடும்பத்தில் ஒரு நபராக இருந்த வைபவ் பாண்டியாவை நம்பி பாண்டியா சகோதரர்கள் இந்த நிறுவனத்தை தொடங்கி இருந்தனர். இந்த நிலையில், வைபவ் பாண்டியா தனியாக ஒரு நிறுவனத்தை தொடங்கி விற்பனையை மடைமாற்றி இருக்கிறார். மேலும், தனது 20 சதவீத லாபத்தை 33 சதவீதமாக மாற்றி இருக்கிறார். மேலும் அவர்கள் நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 1 கோடி ரூபாயை தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றிக் கொண்டு இருப்பதாகவும் புகார் அளிக்கப்பட்ட நிலையில் வைபவ் பாண்டியா கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
இதுவரை தங்கள் குடும்பத்தில் ஒருவராக வலம் வந்த பெரியப்பா மகன் வைபவ் பாண்டியாவால் குடும்பம் இரண்டாகி இருக்கிறது. ஏற்கனவே, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பல அழுத்தங்களை எதிர்கொண்டு வரும் ஹர்திக் பாண்டியா, குடும்பத்திலும் பல சிக்கல்களை எதிர்கொண்டு வருவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications