சென்னை : 2024 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாட உள்ள நிலையில், அந்த அணியின் துவக்க வீரர்கள் யார் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.
நியூசிலாந்து வீரர் டெவான் கான்வே கடந்த இரண்டு ஆண்டுகளாக சிஎஸ்கே அணிக்கு சிறப்பான துவக்கம் அளித்தார். தற்போது அவர் காயத்தில் இருப்பதால் அவருக்கு பதிலாக துவக்க வீரராக களமிறங்கப் போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

டெவான் கான்வே மூன்று வாரங்களுக்கு பின் அணியில் இணைந்து விடுவார் என்பதால் சில போட்டிகளுக்கு மட்டுமே மாற்று துவக்க வீரர் தேவைப்படுகிறார். மற்றொரு துவக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் நிதானமாக ஆடத் துவங்கி பின் வேகமாக ரன் சேர்ப்பார்.
எனவே, ருதுராஜ் கெய்க்வாட்டுடன் களமிறங்கும் மற்றொரு துவக்க வீரர் நிச்சயம் டெவான் கான்வே போல அதிரடி ஆட்டம் ஆட வேண்டும். இந்த நிலையில் சில போட்டிகளுக்கு மட்டுமே மாற்று வீரர் தேவை என்பதால் தோனி துவக்க வீரராக களமிறங்குவாரா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டு இருக்கிறது.
மறுபுறம் மற்றொரு நியூசிலாந்து வீரரான ரச்சின் ரவீந்திரா துவக்க வீரராக களமிறங்க வாய்ப்பு உள்ளதாக முன்னாள் வீரர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் இந்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்து இருக்கிறார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி.
"ரச்சின் ரவீந்திரா இருக்கிறார். அவர் இப்போது தான் அணிக்கு வந்திருக்கிறார். அவர் டெவான் கான்வே போலவே ஆடக் கூடியவர். துவக்க வீரர்களாக வேறு வீரர்களை ஆட வைக்க எங்களுக்கு இன்னும் சில வாய்ப்புகளும் உள்ளன. கடந்த ஆண்டு ரஹானே சிறப்பாக ஆடினார். அவர் தனது பேட்டிங் வரிசையை மேலே கொண்டு சென்று துவக்க வீரராக ஆட வாய்ப்பு உள்ளது." என்றார் மைக் ஹஸ்ஸி.
மேலும், "கேப்டன் தோனி மற்றும் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் யாரை தேர்வு செய்வார்கள் என தெரியவில்லை. ஆனால், எங்களிடம் நிறைய வாய்ப்புகள் உள்ளன." என்றார் ஹஸ்ஸி. ஆக மொத்தத்தில் தோனி துவக்க வீரராக களமிறங்க வாய்ப்பு இல்லை என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார் மைக் ஹஸ்ஸி.