மும்பை : ஐபிஎல் தொடரின் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளராக மாறி இருக்கிறார் யுஸ்வேந்திர சாஹல். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் 1 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் தொடரில் 200 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார். 2008 முதல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இப்போது தான் முதல்முறையாக ஒரு பந்துவீச்சாளர் 200 விக்கெட்கள் என்ற மைல்கல்லை எட்டி இருக்கிறார்.
அதன் மூலம் உலகிலேயே சிறந்த டி20 பந்துவீச்சாளர்களில் ஒருவராக தன்னை நிரூபித்து இருக்கிறார் சாஹல். ஆனால், அவர் இதுவரை இந்திய அணிக்காக ஒரு டி20 உலகக்கோப்பை போட்டியில் கூட ஆடவில்லை என்பது ஏற்கவே முடியாத ஒரு விஷயமாக உள்ளது.

ஒவ்வொரு முறையும் டி20 உலகக்கோப்பை தொடரில் மற்ற சுழற் பந்துவீச்சாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கிறது., ஐபிஎல் தொடரில் சாஹல் சிறப்பாக பந்து வீசி வந்த போதும் அவரை டி20 அணியில் முக்கிய வீரராக இந்திய அணி நிர்வாகம் கருதாமல் இருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ஓராண்டு முன்பு வரை ஒருநாள் அணியில் நிரந்தர சுழற் பந்துவீச்சாளராக இருந்த சாஹல், டி20 அணியில் வருவதும் போவதுமாக இருந்தார். ஆனால், ஓராண்டாக சாஹலை இந்திய அணியில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளது பிசிசிஐ. அவர் ஒருநாள் அணியிலும் இடம் பெறவில்லை.
தற்போது நடந்து வரும் 2024 ஐபிஎல் தொடருக்கு பின் 2024 டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அந்த தொடருக்கான இந்திய அணித் தேர்விலும் சாஹலுக்கு இடம் அளிக்கப்படாது என்றே கூறப்படுகிறது. ஐபிஎல் தொடரில் 200 விக்கெட்கள் என்ற மைல்கல்லை எட்டி இருக்கும் நிலையில், சாஹலை இந்திய டி20 அணியில் தேர்வு செய்ய வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.