ஜெய்ப்பூர் ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் யாருமே எதிர்பார்க்காத வகையில் வெற்றியின் அருகே சென்ற ராஜஸ்தான், லக்னோவிடம் தோல்வியை தழுவி இருக்கிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில், லக்னோ அணியும் ராஜஸ்தான் அணியும் பலப் பரீட்சை நடத்தியது.
இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக ரியான் பராக் களமிறங்கினார். மேலும் அந்த அணியில் 14 வயது வீரரான வைபவ் சூரியவன்சிக்கு இம்பாக்ட் வீரராக வாய்ப்பு கிடைத்தது. இந்த சூழலில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த ரிஷப் பன்ட் அணி நல்ல தொடக்கத்தை பெறும் என எதிர்பார்த்தார்.

ஆனால் மிட்செல் மார்ஸ் நான்கு ரன்களிலும், நிக்கோலஸ் பூரான் 11 ரன்களிலும் கேப்டன் ரிஷப் பந்த் 3 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இதனால் லக்னோ அணி 54 ரன்கள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் எய்டன் மார்க்கரம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி லக்னோ அணியை சரிவிலிருந்து மிட்டார்.
அவருக்கு ஆயுஸ் பதோணி நல்ல கம்பெனி கொடுத்தார். இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை நல்ல நிலைக்கு கொண்டு சென்றனர். சிறப்பாக விளையாடிய ஏய்டன் மார்க்கரம் 45 பந்துகளில் 66 ரன்கள் சேர்த்தார். இதில் 5 பவுண்டரி, மூன்று சிக்ஸர் அடங்கும். இதேபோன்று ஆயுஷ் பதோனி 34 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இதில் 5 பவுண்டரி ஒரு சிக்சர் அடங்கும்.
இறுதியில் அப்துல் சமத் 4 சிக்ஸர்கள் அடித்து ஆட்டத்தையே தலைகீழ் மாற்றினார். பத்து பந்துகளில் அவர் முப்பது ரன்களை சேர்த்து அசத்தினார். இதன்மூலம் லக்னோ 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் அளப்பிற்கு 180 ரன்கள் எடுத்தது. 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. இதில் 14 வயது வீரரான சூர்யவம்சி தாம் எதிர்கொண்ட முதல் பந்திலே சிக்சர் அடித்து ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளித்தார்.
ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவம்சி ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 85 ரன்கள் சேர்த்தது. அபாரமாக விளையாடிய 14 வயது வீரரான சூரியவம்சி 20 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்து இரண்டு பவுண்டரி, மூன்று சிக்சர் அடித்து பெவிலியன் சென்றார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிதிஷ் ரானா எட்டு ரன்களில் ஆட்டமிழக்க, எனினும் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 52 பந்துகளை எதிர்கொண்டு நான்கு சிக்ஸர், 5 பவுண்டரி என 74 ரன்கள் சேர்த்தார்.
எனினும் அவர் ஆட்டம் இழந்தது ராஜஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. கேப்டன் ரியான் பராகும் தனியாக நின்று 26 பந்துகளில் 39 ரன்கள் சேர்த்தார். 18வது ஓவரில் ஆவேஷ் கான் 5 ரன்களை மட்டுமே விட்டுகொடுத்தார். 19வது ஒவரில் ராஜஸ்தான் அணி 11 ரன்களை அடித்து கையிலே போட்டியை வைத்து இருந்தது.
கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு வெறும் ஒன்பது ரன்கள் தான் தேவைப்பட்டது. ஆனால் ஆவேஷ் கான் தொடர்ந்து ஆறு யாக்கர்களை வீசி லக்னோ அணிக்கு அதிர்ச்சி அளித்தார். இதன் காரணமாக லக்னோ அணி ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியாமல் தடுமாறியது. இதன் மூலம் 2 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி திரில் வெற்றி பெற்றது. சிறப்பாக பந்துவீச்சை ஆவேஸ் கான் நான்கு ஓவரில் 37 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.