ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய ஒரு போட்டியில் ஒரு வேடிக்கையான சம்பவம் நடந்தது - போட்டியின் இடையே திடீரென பந்து காணாமல் போனது. அப்போது சூர்யகுமார் யாதவ் பந்தை காணாமல் தவித்துக் கொண்டிருந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 217 ரன்கள் சேர்த்தது. அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சேஸிங் செய்தது. அப்போது பவுண்டரி எல்லைக்கு அருகே நின்றிருந்த சூர்யகுமார் யாதவ், ஒரு பந்தை தவறவிட்டார்.

பந்து பவுண்டரி எல்லைக்கு வெளியே சென்று விழுந்தது. ஆனால், எங்கே பந்து சென்றது என்பதை சூர்யகுமார் யாதவால் கண்டுபிடிக்க முடியவில்லை. பவுண்டரி கோட்டிற்கு வெளியே இருந்த விளம்பரப் பலகைகளுக்குப் பின்னே பந்து சென்றிருக்கலாம் என சூர்யகுமார் அங்கு சென்று தேடிக்கொண்டிருந்தார். அங்கு நின்றிருந்தவர்களும் பந்தை தேடினர்.
அருகில் கேமராமேன் நின்றிருந்ததால், அவரைச் சுற்றியும், அவருக்கு அருகில் இருந்த உபகரணங்களுக்கு அடியிலும் தேடினர். ஆனால் பந்து எங்கேயும் இல்லை. சூர்யகுமார் யாதவ், பந்து எங்கே எனத் தெரியாமல் திகைத்துப் போய் நின்று இருந்தார்.
இதுபோன்ற சம்பவங்கள் தெருவில் கிரிக்கெட் விளையாடும் போது அடிக்கடி நடக்கும் - பந்து எங்கேயாவது ஒரு புதருக்குள் சென்று மாட்டிக்கொண்டால், அதைத் தேடி அலைவார்கள். கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு சம்பவம் ஐபிஎல் போட்டியில் நடந்திருப்பது ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளது. பலரும் இதை வைத்து மீம்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 217 ரன்கள் சேர்த்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கில் சொதப்பியது. கடந்த போட்டியில் சதம் அடித்த 14 வயது வீரர் வைபவ் சூர்யவம்சி, இந்தப் போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மற்ற பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களையே எடுத்தனர். அதிகபட்சமாக ஜோஃப்ரா ஆர்ச்சர் 27 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்திருந்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் 20 ரன்களைக் கூட எட்டவில்லை.
இந்த மோசமான பேட்டிங்கால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இமாலயத் தோல்வியைச் சந்தித்தது.