சென்னை: 2025 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முன்னேறி இருக்கிறது. ஆனால், இதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு வகையில் உதவி செய்து இருக்கிறது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் சுற்றின் இறுதிக்கட்டத்தில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கப் போகும் அணிகள் எவை என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
எப்போதும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் நான்கு அணிகள் எவை என்று எதிர்பார்ப்பு இருக்கும். இந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய நான்கு அணிகளும் சில போட்டிகளுக்கு முன்னதாகவே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டன.

ஆனால், இந்த நான்கு அணிகளில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கப் போகும் அணிகள் எவை என்று எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஏனெனில், முதல் இரண்டு இடங்களைப் பிடித்தால் பிளே ஆஃப் சுற்றில் முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் விளையாடலாம். அதில் வெற்றி பெற்றால் நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடலாம். தோல்வி அடைந்தாலும் இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் விளையாடும் மற்றொரு வாய்ப்பு கிடைக்கும்.
புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இடம் பெற்றால் பிளே ஆஃப் சுற்றில் இரண்டு வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் எந்தெந்த அணிகள் இடம் பெறப் போகின்றன என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அப்போது குஜராத் டைட்டன்ஸ் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய கடைசி லீக் போட்டி அதில் முக்கியமான ஒன்றாக இருந்தது.
அந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றால், குஜராத் டைட்டன்ஸ் அணியால் முதல் இரண்டு இடங்களில் இடம் பிடிக்க முடியாது என்ற நிலை இருந்தது. அதே சமயம், அதை பயன்படுத்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் இரண்டு இடங்களுக்கு முன்னேறலாம் என்ற சூழ்நிலையும் இருந்தது.
அதற்கு ஏற்ப அந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது. அதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி மூன்றாவது இடத்திற்கு சென்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியது. பஞ்சாப் கிங்ஸ் அணி முதலிடத்தில் இருந்தது.
இதை அடுத்து பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் விளையாடின. அதில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட்டது. எனவே, பெங்களூரு அணி இந்த ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு சற்று எளிதான வகையில் சென்றதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முக்கிய காரணம்.
ஏனெனில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மூன்றாவது இடத்தைப் பிடித்து இருந்தால் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் எலிமினேட்டர் போட்டியில் விளையாடியிருக்கும். நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் எளிதாக வீழ்த்தியது.
மும்பை அணியின் முன்னணி வீரர்கள் அனைவரும் சிறப்பாக விளையாடியிருந்தனர். இது போன்ற நாக் அவுட் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இதற்கு முன் பலமுறை தோல்வி அடைந்திருந்ததால், அந்த அணி எலிமினேட்டர் போட்டியில் விளையாடியிருந்தால் அது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி இருக்கும். தோற்றால் வெளியேறுவோம் என்ற அழுத்தம் வீரர்களின் செயல்பாட்டை பாதித்து இருக்கக் கூடும்.
ஆனால், தற்போது முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில் தோற்றாலும் மறுவாய்ப்பு உண்டு என்ற சற்று அழுத்தம் குறைந்த சூழ்நிலையில் பெங்களூரு அணி விளையாடி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. என்னதான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பரம எதிரிகளாக பாவிக்கப்பட்டாலும், இந்த ஆண்டு பெங்களூரு அணி எளிதாக இறுதிப் போட்டிக்கு முன்னேற சிஎஸ்கே அணி ஒரு வகையில் உதவி செய்துள்ளது.
தற்போது இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக விளையாட உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு சென்றால், அந்த அணியே வெற்றி பெறும் என ரசிகர்கள் தற்போது பரவலாக பேசி வருகின்றனர். என்ன நடக்கும் என்று பார்க்கலாம்.