மரண அடி அடித்த சமீர்.. தூக்கி எறிந்த சிஎஸ்கே.. 20 சிக்ஸ், 13 ஃபோர், 201 ரன் அடித்த முன்னாள் வீரர்
சென்னை: 2025 ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து நீக்கப்பட்ட உத்தர பிரதேச வீரர் சமீர் ரிஸ்வி சமீபத்தில் நடந்த அண்டர் 23 போட்டி ஒன்றில் 97 பந்துகளில் 201 ரன்கள் அடித்து மிரள வைத்துள்ளார். 13 ஃபோர் மற்றும் 20 சிக்ஸ் அடித்து மிரட்டி இருக்கிறார்.
அவரது அதிரடியால் உத்தர பிரதேச அணி, அருணாச்சல பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் 405 ரன்கள் சேர்த்தது. அந்தப் போட்டியில் உத்தர பிரதேச அணி 152 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அண்டர் 23 போட்டிகளில் மிகக் குறைந்த பந்துகளில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பிரம்மாண்ட சாதனையை செய்து இருக்கிறார் சமீர் ரிஸ்வி.

அவர் இதுபோன்ற அதிரடி ஆட்டத்தை ஆடுவார் என்ற நம்பிக்கையில் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அவரை 2024 ஐபிஎல் தொடரில் 8.40 கோடி ரூபாய்க்கு வாங்கி இருந்தது. ஆனால், சமீர் ரிஸ்வி 2024 ஐபிஎல் தொடரில் 5 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து 51 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 118 என்பதாக மட்டுமே இருந்தது.
இதை அடுத்து அவர் 2025 ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சமீர் ரிஸ்வியை வாங்க ஆர்வமும் காட்டவில்லை. ஆனால், டெல்லி கேப்பிடல்ஸ் அணி அவரை 90 லட்சத்திற்கு வாங்கியது.
அவர் இப்போது அதிரடி ஆட்டம் ஆடி இருப்பதால் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் சமீர் ரிஸ்வி இடம் பெற வாய்ப்பு உள்ளது. சமீர் ரிஸ்வியின் ஆட்டம் குறித்து சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. பலரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை விமர்சனம் செய்து வருகின்றனர். சமீர் ரிஸ்வியை 2025 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி குறைந்த விலைக்கு வாங்கி இருக்க வேண்டும் எனவும் சுட்டி காட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications