லக்னோ: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் எந்த ஐபிஎல் கேப்டனும் செய்யாத பிரம்மாண்ட ஐபிஎல் சாதனையை செய்து மிரள வைத்து இருக்கிறார். அனில் கும்ப்ளேவின் பவுலிங் ரெக்கார்டையும் உடைத்து இருக்கிறார்.
2025 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய 16வது லீக் போட்டி லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அதிரடியாக ஆடி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் முக்கிய பந்துவீச்சாளர்கள் அதிக ரன்களை வாரி இறைத்த நிலையில் ஹர்திக் பாண்டியா நான்கு ஓவர்களில் 36 ரன்கள் விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். அவர் இந்த போட்டியில் ஆறாவது பந்துவீச்சாளராகத்தான் செயல்பட்டார்.
ஆனால், மற்ற பந்துவீச்சாளர்களை விட அதிக விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே ஐந்து ஒரே போட்டியில் விக்கெட்களை வீழ்த்திய முதல் கேப்டன் என்ற மாபெரும் சாதனையை செய்து இருக்கிறார்.
இதற்கு முன் ஐபிஎல் தொடரில் எந்த ஒரு கேப்டனும் ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட் வீழ்த்தியதில்லை. அனில் கும்ப்ளே இரண்டு முறை 16 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். அதுவே இதுவரை ஐபிஎல் தொடரில் ஒரு கேப்டனின் சிறந்த பந்துவீச்சாக இருந்தது. அதை ஹர்திக் பாண்டியா முறியடித்து இருக்கிறார்.
மேலும், ஐபிஎல் தொடரில் கேப்டனாக அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அனில் கும்ப்ளேவின் இரண்டாவது இடத்தை சமன் செய்திருக்கிறார் ஹர்திக் பாண்டியா. இந்த பட்டியலில் ஷேன் வார்னே 57 விக்கெட்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். அனில் கும்ப்ளே மற்றும் ஹர்திக் பாண்டியா 30 விக்கெட்களுடன் இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்டு உள்ளனர். ரவிச்சந்திரன் அஸ்வின் 25 விக்கெட்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.
இது மட்டும் இன்றி ஹர்திக் பாண்டியா மற்றொரு சாதனையும் செய்திருக்கிறார். கேப்டனாக இரண்டு வெவ்வேறு அணிகளுக்கு எதிராக மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்களை வீழ்த்திய முதல் கேப்டன் என்ற சாதனையையும் செய்திருக்கிறார்.
ஹர்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்தபோது 2023 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மூன்று விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக 5 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார்.