மும்பை: ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்க வைக்கலாம் என்ற பிசிசிஐ-ன் விதிகள் விரைவில் வெளியாகவுள்ளது. அதற்கு முன்பாகவே ஒவ்வொரு அணியும் ட்ரேட் செய்வது தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டனர். மும்பை அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா தான் கேப்டன் என்பதில் உறுதியாக உள்ளது.
இதனால் இந்திய அணியின் கேப்டனாக உள்ள சூர்யகுமார் யாதவை மும்பை அணியால் தக்க வைக்க முடியுமா என்பது சந்தேகம் தான். ஏனென்றால் சூர்யகுமார் யாதவிற்கான ஊதியம், அவருக்கான விளம்பர ஒப்பந்தங்கள் உள்ளிட்ட செலவுகளை மும்பை அணியால் செய்வது கடினம். ஹர்திக் பாண்டியா அல்லது சூர்யகுமார் யாதவ் ஒருவருக்கு தான் மும்பை அணியால் முதன்மை மரியாதையை அளிக்க முடியும்.

இதனிடையே ரோஹித் சர்மா மும்பை அணியில் இருப்பதால், மும்பை உரிமையாளர்களுக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கேகேஆர் அணி தரப்பில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சூர்யகுமார் யாதவ் இடையில் ட்ரேட் செய்யலாம் என்று மும்பை அணியை அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயர் மும்பையை சேர்ந்தவர் என்பதால், மும்பை அணிக்கும் சாதகமாக அமையும். அதேபோல் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தங்கள் அணிக்கு கேப்டனாக இருந்தால், பிராண்ட் வேல்யூ உச்சத்திற்கு செல்லும் என்று கேகேஆர் அணி கணித்துள்ளது. ஏற்கனவே சூர்யகுமார் யாதவும் கேகேஆர் அணிக்காக விளையாடி இருக்கிறார்.
இதனால் பலரும் அம்பானி குடும்பம் தனது வேலையை தொடங்கிவிட்டதாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர். ஆனால் இம்முறை ஆட்டத்தை தொடங்கியது கேகேஆர் அணியின் உரிமையாளர் ஷாருக் கான் தான் என்று கூறப்படுகிறது. கேகேஆர் அணியின் முன்னாள் ஆலோசகர் கவுதம் கம்பீரை வைத்து சூர்யகுமார் யாதவிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பிசிசிஐ தரப்பில் ரீடென்ஷன் பாலிசி வெளியான பின், இந்த பேச்சுவார்த்தை தொடரும் என்று கூறப்படுகிறது. இரு வீரர்களும் தக்க வைக்கப்படும் பட்சத்தில், ட்ரேட் செய்யப்பட்டால் நிச்சயம் இரு வீரர்களுக்கும் அந்தந்த அணிகள் ஊதியத்தை அதிகரித்து கொடுப்பார்கள். இதன் மூலம் இரு அணிக்கும் சாதகம் ஏற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.