மும்பை: இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் உலகின் முன்னணி சுழற் பந்துவீச்சாளரான ரஷித் கான் பந்து வீச்சில் 5 பந்துகளில் 5 சிக்ஸர்களை அடித்து மிரட்டி இருக்கிறார் கீரான் பொல்லார்ட். இந்த நிலையில், ஒரு வீரராக பயன்படுத்தப்பட வேண்டிய அவரை மும்பை இந்தியன்ஸ் அணி வலுக்கட்டாயமாக நீக்கி, பேட்டிங் பயிற்சியாளராக வைத்திருப்பதை ரசிகர்கள் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்து வருகின்றனர்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் சதர்ன் பிரேவ் மற்றும் ட்ரெண்ட் ராக்கெட் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் ரஷித் கான் பந்து வீச்சில் 5 பந்துகளில் 5 சிக்ஸர்களை அடித்தார் கீரான் பொல்லார்ட். 23 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்து தனது அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

கீரான் பொல்லார்டின் சிக்ஸர் வேட்டையை பார்த்த மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு முன் கீரான் பொல்லார்ட் ஐபிஎல் தொடரிலிருந்து வலுக்கட்டாயமாக ஓய்வு பெற வைக்கப்பட்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அதற்கு மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தான் காரணம் என கூறப்படுகிறது.
அவருக்கு பதிலாக ஆஸ்திரேலியாவின் டிம் டேவிட் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஃபினிஷராக சேர்க்கப்பட்டார். ஆனால், அவரது செயல்பாடு சரியாக இல்லை என்ற விமர்சனம் உள்ளது. இந்த நிலையில். கீரான் பொல்லார்ட் தற்போது வரிசையாக ஐந்து சிக்ஸ் அடித்ததை பார்த்த ரசிகர்கள் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கீரான் பொல்லார்ட் தனது பேட்டிங் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு வீரராக இடம் பெற வேண்டும் என கூறி வருகின்றனர்.

கீரான் பொல்லார்ட் இல்லை என்றால் மும்பை இந்தியன்ஸ் அணியால் வெற்றி பெற முடியாது எனவும் கூறி வருகின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பொல்லார்ட்டுக்கு தற்போது 37 வயது தான் ஆகிறது. அவர் உலகின் பல்வேறு டி20 தொடர்களில் பங்கேற்று அதிரடியாக ரன் குவித்து வருகிறார், ஆனால், ஐபிஎல் தொடரில் மட்டுமே ஓய்வு பெற்று இருக்கிறார்.