கொல்கத்தா: 2025 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ஆட்டநாயகன் ஆன ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர் க்ருனால் பாண்டியா, தனது சகோதரர் ஹர்திக் பாண்டியாவை விமர்சித்து வருபவர்களுக்கு கடுமையான பதிலடி கொடுத்திருக்கிறார்.
"எங்களை உடைக்க முடியும், ஆனால் கொல்ல முடியாது. நாங்கள் மீண்டு வருவோம்" என அதிரடியாக பேசி இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளில் ஹர்திக் பாண்டியா மிக மோசமான பல சூழ்நிலைகளை எதிர்கொண்டார். அவரது தனிப்பட்ட வாழ்வில் சில சிக்கல்கள் ஏற்பட்டது.

அவர் தனது மனைவி நடாஷா ஸ்டான்கோவிச்சை பிரிந்தார். மறுபுறம் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஆனதை ரோஹித் சர்மாவின் ரசிகர்கள் விரும்பவில்லை. அதனால் மைதானங்களில் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பி வந்தனர். அது அவரை மனதளவில் மிகவும் பாதித்தது.
பின்னர் 2024 டி20 உலக கோப்பை வெற்றிக்கு பிறகு அந்த நிலை மாறியது. தற்போது 2025 சாம்பியன்ஸ் டிராபி வெற்றியிலும் ஹர்திக் பாண்டியா சிறப்பாக பங்காற்றினார். அவர் மீண்டும் 2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக விளையாட இருக்கிறார்.
இந்த நிலையில் அவரது மூத்த சகோதரரான க்ருனால் பாண்டியா அது பற்றி பேசியிருக்கிறார். "நீங்கள் எங்களை உடைக்க முடியும், எங்களை நொறுக்க முடியும். ஆனால் எங்களை கொல்ல முடியாது. நாங்கள் மீண்டு வருவோம். நாங்கள் ஒரு குடும்பமாக மிகவும் நெருக்கமாக இருக்கிறோம். கடந்த சில ஆண்டுகளில் ஹர்திக் பாண்டியா மிக மோசமான சூழ்நிலைகளை எதிர்கொண்டு விட்டார்."
"அதை பற்றி நான் அதிகம் வெளியே பேசியதில்லை. ஆனால், அவர் தற்போது எழுந்து நின்று தொடர்ந்து போட்டியை வெல்லும் செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். அவர் 2024 டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பின் அழுதார். அதன் மூலம் அது அவருக்கு எத்தனை முக்கியமானது என்பதை வெளிப்படுத்தினார். அவருக்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார் க்ருனால் பாண்டியா.