மும்பை: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் மாதம் தொடங்கவுள்ளது. கடந்த இருமுறை ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்ட இந்திய அணி, புதிய வரலாறு படைத்தது. இதன் காரணமாக பார்டர் கவாஸ்கர் தொடரை 10 ஆண்டுகளுக்கும் மேலாக வெல்ல முடியாமல் ஆஸ்திரேலியா தவித்து வருகிறது.
இதனிடையே இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தயாராவதற்காக ஆஸ்திரேலியா அணி வீரர்கள் ஷெஃபீல்ட் ஷீல்ட் தொடரில் பங்கேற்க உள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் ஆஸ்திரேலியா அணியின் பவுலிங்கிற்கும் இந்திய அணியின் பேட்டிங்கிற்கும் இடையிலான டெஸ்ட் தொடராக இந்த டெஸ்ட் தொடர் இருக்கும் என்று கருதப்படுகிறது.

இதனிடையே ஐபிஎல் தொடரின் போது லக்னோ அணிக்காக ஆடிய இளம் வீரர் மயங்க் யாதவின் வேகம் பலருக்கும் வியப்பை கொடுத்தது. 155 கிமீ வேகத்தை எளிதாக வீசக் கூடிய பவுலராக மயங்க் யாதவ் இருந்தது ஆஸ்திரேலியா வீரர்கள் பலரையும் கவனிக்க வைத்தது. வர்ணனையில் இருந்த ஸ்டீவ் ஸ்மித் கூட மயங்க் யாதவை ஆஸ்திரேலியா மண்ணில் எதிர்கொள்ள ஆவலாக உள்ளேன் என்று கூறியிருந்தார்.
இதனால் மயங்க் யாதவ் இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து செல்லப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிடம், முகமது ஷமி மற்றும் மயங்க் யாதவ் ஃபிட்னஸ் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், முகமது ஷமியின் ஃபிட்னஸ் குறித்த கேள்வி சரியானது.
ஆனால் மயங்க் யாதவின் ஃபிட்னஸ் குறித்த கேள்வி புரியவில்லை. ஏனென்றால் முகமது ஷமி சீனியர் வீரர். அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா மண்ணில் முகமது ஷமிக்கு நல்ல அனுபவம் உள்ளது. அவர் இன்னும் முழு ஃபிட்னஸையும் எட்டவில்லை. விரைவில் என்சிஏவில் பயிற்சியை தொடங்குவார். வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன் அவர் ஃபிட்னஸை எட்டுவார் என்று எதிர்பார்க்கிறோம்.
மயங்க் யாதவை பொறுத்தவரை அவர் ஆஸ்திரேலியா செல்வாரா என்பது தெரியவில்லை. ஏனென்றால் அவர் இன்னும் இந்திய அணிக்குள் வரவில்லை. தற்போது அவர் என்சிஏவில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். பயிற்சியாளர்களால் தீவிரமாக கண்காணிக்கட்டு வருகிறார். அவர் திறமையான வீரர் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் மயங்க் யாதவ் நெட் பவுலராக கூட ஆஸ்திரேலியா பயணிப்பது சந்தேகம் என்று பார்க்கப்படுகிறது. லக்னோ அணிக்காக ஆடிய அவர் 3 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மோர்னே மோர்கல் உடன் நெருக்கமாக மயங்க் யாதவ் பணியாற்றியுள்ளதால், கடைசி நேரத்தில் ஏதேனும் மாற்றம் நடக்குமா என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.