மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து சுழற்பந்து வீச்சாளரான ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அல்லா கசான்ஃபர் நீக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு பதிலாக மற்றொரு ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரான முஜிபுர் ரஹ்மான் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.
2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் அல்லா கசான்ஃபரை மும்பை இந்தியன்ஸ் அணி 4.8 கோடி ரூபாய்க்கு வாங்கி இருந்தது. அவருக்கு தற்போது காயம் ஏற்பட்டு இருக்கிறது. அதனால் அவர் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஆடும் வாய்ப்பை இழந்து இருக்கிறார். முஜிபுர் ரஹ்மானும் காயத்தால் சாம்பியன்ஸ் டிராபியில் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஐபிஎல் தொடருக்கு முன் முஜிபுர் ரஹ்மான் உடல் தகுதியை பெற்று விடுவார் என நம்பப்படுகிறது. இந்த நிலையில்தான் மும்பை இந்தியன்ஸ் அணி முஜிபுர் ரஹ்மானை தங்கள் அணிக்கு அழைத்துக் கொண்டு இருக்கிறது.
2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் முஜிபுர் ரஹ்மான் இரண்டு கோடி ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டு இருந்தார். ஆனால் எந்த அணியும் அவரை வாங்கவில்லை. தற்போது அவருக்கு அதிர்ஷ்டம் அடித்து இருக்கிறது. இதில் வேடிக்கையான மற்றொரு சம்பவம் உள்ளது.
2024 ஐபிஎல் தொடரில் முஜிபுர் ரஹ்மானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவர் காயத்தால் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக அல்லா கசான்ஃபர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் அதற்கு நேர்மாறான விஷயம் நடந்திருக்கிறது. அதாவது அல்லா கசான்ஃபர் காயத்தால் நீக்கப்பட்டு முஜிபுர் ரஹ்மான் மும்பை இந்தியன்ஸ் அணியில் வாய்ப்பு பெற்று இருக்கிறார்.
முஜிபுர் ரஹ்மான் இதற்கு முன் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்காக விளையாடி இருக்கிறார். 2018 ஆம் ஆண்டு முஜிபுர் ரஹ்மான் பஞ்சாப் கிங்ஸ் அணியில் அறிமுகமான போது அவரே ஐபிஎல் தொடரில் அறிமுகமான இளம் வீரர் என்ற சாதனையை செய்தார். இதுவரை 19 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இது அவரது சிறப்பான செயல்பாடு இல்லை என்றாலும் விரைவில் தனது சிறப்பான செயல்பாட்டை அளிப்பார் என விமர்சகர்கள் நம்புகின்றனர்.
18 வயதான அல்லா கசான்ஃபருக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் கிடைத்த வாய்ப்பு அரிதானது. ஆனால் அவரது காயத்தால் அந்த வாய்ப்பை இழந்து இருக்கிறார். அவர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். 11 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.