IPL 2025: மீண்டும் பிசிசிஐயிடம் சிக்கிய ஹர்திக் பாண்டியா.. 2வது முறையாக தண்டனை..நெஹ்ராவுக்கு சிக்கல்
மும்பை: ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் குஜராத், மும்பை அணி மோதிய ஆட்டம் மிகவும் பரபரப்பாக நடந்து முடிந்தது. புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கான போட்டி என்பதால் இரு அணிகளும் கடுமையாக மோதினர். மேலும் மழை பாதிப்பும் இருந்ததால் ஆட்டம் இருமுறை தடைப்பட்டது.
இந்த சூழலில் குஜராத் அணி கடைசி ஓவரில் அபாரமாக விளையாடி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் குஜராத் அணி முதல் இடத்தை பிடித்தது. இந்த போட்டியின் போது நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட ஓவர்கள் வீச அதிக நேரம் மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்துக் கொண்டது.

இதனால் கடைசி ஓவரில் வெறும் நான்கு பில்டர்கள் தான் பவுண்டரி லைனில் நிற்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் ஹர்திக் பாண்டியாவின் இந்த தவறால் போட்டி முடிய தாமதமானது. இதன் காரணமாக அவருக்கு போட்டியின் ஊதியத்திலிருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
இது நடப்பு சீசனில் நிகழ்த்தப்பட்ட இரண்டாவது முறை என்பதால் ஹர்திக் பாண்டியாவுக்கு மட்டுமல்லாமல் அனைத்து வீரர்களுக்கும் ஊதியத்திலிருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஹர்திக் பாண்டியா 24 லட்சம் ரூபாய் அபராதமும் மற்ற வீரர்கள் 6 லட்சம் ரூபாய் அபராதமும் செலுத்த வேண்டும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இதேபோன்று குஜராத் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆன ஆஷிஷ் நெஹ்ராவுக்கும் பிசிசிஐ போட்டியின் ஊதியத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. மழை பெய்த போது போட்டி நிறுத்தப்பட்டதால் நடுவர்களுடன் குஜராத் அணியின் பயிற்சியாளர் நெஹ்ரா வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதன் காரணமாகத்தான் அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. தம் மீதான புகாரை நெஹ்ரா ஒப்புக்கொண்டு இருப்பதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. எனினும் பிசிசியின் அறிக்கையில் நெஹ்ரா என்ன தவறு செய்தார் என்பது தொடர்பான விவரம் இல்லை. ஏற்கனவே மூன்றாம் நடுவருடன் குஜராத் அணியில் இடம் பிடித்திருந்த முனாப் பட்டேல் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். இதன் காரணமாக அவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications