மும்பை: மும்பை அணியுடனான ரோஹித் சர்மாவின் பயணம் தொடர்வதற்கு வாய்ப்பில்லை என்று இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். அதேபோல் மும்பை அணி எந்த காரணத்தை கொண்டும் சூர்யகுமார் யாதவை விட்டு விலக வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ள நிலையில், பிசிசிஐ ரீடென்ஷன் தொடர்பான விதிகளை விரைவில் வெளியிடவுள்ளது. பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தரப்பில் ஆகஸ்ட் மாத இறுதியிலேயே ரீடென்ஷன் தொடர்பான விதிகள் வெளியாகும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் மெகா ஏலம் குறித்த முழு முடிவுகள் எடுக்கப்படாததால், செப்டம்பர் மாத இறுதியில் விதிகளை வெளியிட பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் மும்பை அணியுடன் ரோஹித் சர்மா உறவை தொடர்வாரா என்பதே பலரின் கேள்வியாக உள்ளது. ஏனென்றால் 5 முறை ஐபிஎல் சாம்பியன் கோப்பையை வென்ற போதும், மும்பை அணி கடந்த சீசனுக்கு முன்பாக ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது. இதனால் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டார். இருந்தாலும் கடந்த சீசனில் மும்பை அணி கடைசி இடத்திலேயே நிறைவு செய்தது. அதேபோல் மும்பை அணி வீரர்களிடையே ஏராளமான முரண்பாடுகள் எழுந்ததாகவும் கூறப்பட்டது.
மும்பை வீரர்கள் அனைவரும் ரோஹித் சர்மா பிரிவு, ஹர்திக் பாண்டியா பிரிவு என்று பிரிந்து செயல்பட்டதாக சில விமர்சகர்கள் கூறினர். இதனால் ரோஹித் சர்மா அடுத்த சீசனில் மும்பை அணியுடன் தொடர்வது சந்தேகம் என்றே பார்க்கப்பட்டது. இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசுகையில், மும்பை அணியுடன் இருப்பாரா? அல்லது வெளியேறுவாரா? என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. எனது உள்ளுணர்வு ரோஹித் சர்மா வெளியேறுவார் என்று சொல்கிறது.
எந்த வீரர் ரீடெய்ன் செய்யப்பட்டாலும், அவர்கள் 3 ஆண்டுகள் அந்த அணியுடன் தொடர்ந்து பயணிப்பார்கள் என்று நினைக்கலாம். ஒரே அணியுடன் பயணிக்க வேண்டுமென்றால் நீங்கள் தோனியாக இருக்க வேண்டும். தோனி மற்றும் சிஎஸ்கே அணியின் கதையே வேறு. அதேபோல் மும்பை அணி மற்றும் ரோஹித் சர்மாவின் கதை வேறு. எனக்கு தெரிய வரை, ரோஹித் சர்மா விலகுவார்.. அல்லது மும்பை அணி உறவை முறிக்கும். என்ன வேண்டுமென்றாலும் நடக்க வாய்ப்புகள் உள்ளது.
ஆனால் மும்பை அணியால் ரோஹித் சர்மா தக்க வைக்கப்பட வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். ரோஹித் சர்மா ரிலீஸ் செய்யப்படுவார் என்பது தொடர்பாக என்னிடம் எந்த தகவலும் கிடையாது. ஒருவேளை ரோஹித் சர்மா ஏலத்திற்கு செல்ல விரும்பவில்லை என்றால், நிச்சயம் ட்ரேட் செய்யப்படுவார். ஆனால் ட்ரேட் செய்யப்படவில்லை என்றால், நிச்சயம் ரோஹித் சர்மாவை ஏலத்தில் பார்க்கலாம். மும்பை அணியுடனான ரோஹித் சர்மாவின் பயணம் முடிவுக்கு வந்துவிட்டதாக கருதுகிறேன்.
அதேபோல் சூர்யகுமார் யாதவ் ட்ரேட் செய்யப்பட வாய்ப்பில்லை. அதுகுறித்து நான் எந்த தகவலும் கேள்விப்படவில்லை. சூர்யகுமார் யாதவை விட்டு மும்பை அணி விலக வாய்ப்பில்லை. அதேபோல் சூர்யகுமார் யாதவும் மும்பை அணியை விட்டு விலக மாட்டார். அதனால் சூர்யகுமார் யாதவ் வேறு எந்த அணிக்கும் செல்ல மாட்டார் என்று தெரிவித்துள்ளார்.