மும்பை: 2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக சூர்யகுமார் யாதவை மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அணி மாற்றம் செய்ய பின்னணி வேலைகள் நடந்து வருவதாக தகவல்கள் வெளியானது. இந்த விவகாரத்தில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மீது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்டார் கவுதம் கம்பீர். பின்னர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க வேண்டி வந்ததால், கொல்கத்தா அணியின் ஆலோசகர் பதவியை விட்டு விலகினார்.

இந்த நிலையில் தனக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இருக்கும் நெருங்கிய தொடர்பை பயன்படுத்திக் கொண்டு சூர்யகுமார் யாதவை மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து பிரிக்க அவர் முயற்சி செய்கிறாரா? என்ற சந்தேகம் மும்பை இந்தியன்ஸ் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இந்திய டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவை நியமிக்க வைத்ததில் கம்பீரின் பங்கும் உள்ளது.
முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா இந்திய டி20 அணியின் நிரந்தர கேப்டன் ஆவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அந்த நம்பிக்கையில் தான் கடந்த ஐபிஎல் தொடரில் அவரை குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து சுமார் 100 கோடி ரூபாய் கொடுத்து மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தங்கள் அணிக்கு அழைத்து வந்தது. அவரை கேப்டனாகவும் ஆக்கியது.

அந்தத் திட்டத்துக்கு முடிவு கட்டும் வகையில் இந்திய டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமாரை நியமிக்க வைத்தார் கவுதம் கம்பீர். சூர்யகுமார் யாதவும் மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்தவர் என்பதால் அந்த அணி நிர்வாகம் சற்று ஆறுதல் அடைந்தது. தற்போது சூர்யகுமார் யாதவையும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வளைக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருவதால் மும்பை அணி நிர்வாகம் அதிருப்தியில் உள்ளது. சூர்யகுமார் யாதவை தங்கள் அணியை விட்டு வெளியேற்றும் முயற்சியில் கம்பீர் ஈடுபட்டு இருக்கிறாரா? என மும்பை இந்தியன்ஸ் வட்டாரம் சந்தேகம் கொண்டுள்ளது.