சென்னை: 2025 ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்னதாக விதிகளில் சில மாற்றங்களை அறிவித்திருந்தது பிசிசிஐ. அதில் தோனியை உள்ளூர் வீரராக அறிவிக்கும் வகையில் ஒரு விதியில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அதனால், வேறு சில அணிகளும் பயனடைவார்கள் என்றாலும் சிஎஸ்கே அணி தான் அதனால் அதிக அளவில் பயனடையும்.
அதனால் ஐபிஎல் உரிமையாளர்கள் கூட்டத்தின் போதே அது குறித்த விவாதம் எழுந்திருந்தது. இந்திய அணிக்காக ஆடிய வீரர் ஒருவர் ஐந்தாண்டுகளுக்கு மேலாக இந்திய அணியில் இடம் பெறாமல் இருந்தால் அவரை உள்ளூர் வீரராக அறிவிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அவர் அன்கேப்ட் (Uncapped) வீரர்கள் பட்டியலில் தான் இடம் பெறுவார்.

ஒரு அன்கேப்ட் வீரரை ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக தக்க வைக்க குறைவான சம்பளம் மட்டும் அளித்தால் போதுமானது. 2025 ஐபிஎல் தொடருக்கு முன் அன்கேப்ட் வீரர் ஒருவரை தக்க வைக்க 4 கோடி சம்பளமாக கொடுத்தால் போதுமானது. அந்த வகையில் தற்போது 12 கோடி சம்பளம் வாங்கும் தோனி 4 கோடி சம்பளத்துக்கு ஒப்பந்தம் செய்யப்படுவார்.
தோனி இம்பாக்ட் வீரராக மட்டுமே 2025 ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கிறார் என்பதால் அவருக்கு கூடுதல் சம்பளம் அளிப்பது பிற வீரர்களை ஏலத்தில் வாங்க சிக்கலை ஏற்படுத்தலாம் என்பதால் தான் சிஎஸ்கே நிர்வாகம் மற்றும் தோனி அன்கேப்ட் வீரர் விதியில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினார்கள்.
சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஐபிஎல் உரிமையாளர்கள் கூட்டத்தில் சிஎஸ்கே அணி இந்த விதியை அமல்படுத்த வேண்டும் என பிசிசிஐ இடம் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. அப்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் அதை எதிர்த்து இருக்கிறார். ஆனால், மற்றொரு முக்கிய ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸ் அணி அதை ஆதரித்துள்ளது.
அதன் பின்னணியில் ஐபிஎல் ஒளிபரப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ் உரிமையாளர்களான அம்பானி குடும்பத்தினரின் மற்றொரு நிறுவனமான ஜியோ சினிமா ஐபிஎல் தொடரை நேரலையில் ஒளிபரப்பி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜியோ சினிமாவில் எப்போதெல்லாம் தோனி ஐபிஎல் தொடரில் பேட்டிங் ஆடுகிறாரோ அப்போதெல்லாம் ஐபிஎல் ஒளிபரப்பின் பார்வையாளர்கள் எண்ணிக்கை நேரலையில் பல கோடிகளை எட்டி வருகிறது.
அந்த வகையில் தோனி ஐபிஎல் தொடரில் ஆடுவது ஐபிஎல் தொடரை ஒளிபரப்பி வரும் ஜியோ சினிமாவுக்கு முக்கியமான ஒரு விஷயமாக உள்ளது. அதனாலயே கூட தோனி சிஎஸ்கே அணிக்காக ஆடுவதை மும்பை இந்தியன்ஸ் அணி ஆதரித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.