மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று ஐபிஎல் அறிமுகமான இளம் வீரர் விக்னேஷ் புத்தூர், காயம் காரணமாக இந்த ஆண்டுத் தொடரிலிருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். நடப்பு ஐபிஎல் சீசனில் இதுவரை அவர் 5 போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தாலும், தனது பந்துவீச்சால் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றார்.
ஐந்து போட்டிகளில் மொத்தமாக ஐந்து விக்கெட்டுகளை விக்னேஷ் புத்தூர் வீழ்த்தியிருந்தார். குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான தனது அறிமுகப் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டு மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் விக்னேஷ் புத்தூர் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு இருந்தது.

கேரளாவைச் சேர்ந்த அவர் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடுவார், அதன் பின் இந்திய அணியிலும் இடம் பெறுவார் என ரசிகர்கள் ஊகங்களை வெளியிட்டு வந்தனர். ஆனால், அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த காயம் நேர்ந்துள்ளது.
விக்னேஷ் புத்தூருக்கு தாடைப் பகுதியில் எலும்பு அழுத்த எதிர்வினை (Bone Stress Reaction) ஏற்பட்டு இருப்பதாக மும்பை இந்தியன்ஸ் அணி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. விக்னேஷ் புத்தூருக்குப் பதிலாக ரகு சர்மா என்ற உள்நாட்டு வீரரை மும்பை இந்தியன்ஸ் அணி மாற்று வீரராகத் தேர்வு செய்திருக்கிறது.
இந்த ரகு சர்மா பஞ்சாப் மற்றும் புதுச்சேரி அணிகளுக்காக 11 முதல் தரப் போட்டிகளிலும், 9 லிஸ்ட் ஏ போட்டிகளிலும், 3 டி20 போட்டிகளிலும் விளையாடியிருக்கிறார். தனது முதல் தர கிரிக்கெட் வாழ்வில் மூன்று முறை 10 விக்கெட்டுகளையும், ஐந்து முறை 5 விக்கெட்டுகளையும் ஒரு இன்னிங்ஸில் வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறார்.
2024-25 விஜய் ஹசாரே டிராபி தொடரில் ரகு சர்மா பஞ்சாப் அணிக்காக 9 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இதை எடுத்து, விக்னேஷ் புத்தூருக்கு இணையான மாற்று வீரராக ரகு சர்மாவை தேர்வு செய்து இருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி.
விக்னேஷ் புத்தூரை ஐபிஎல் தொடரில் இருந்து நீக்கினாலும், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் அவரை அணியை விட்டு வெளியே அனுப்பப் போவதில்லை என அறிவித்திருக்கிறது. அவர் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பயணிப்பார் எனவும், மும்பை இந்தியன்ஸ் அணியின் மருத்துவ மற்றும் கண்காணிப்புக் குழு அவர் தனது காயத்திலிருந்து மீண்டு வர உதவி செய்யும் எனவும் அறிவித்திருக்கிறது.
இருப்பினும், தாடைப் பகுதியில் ஏற்பட்ட காயத்திற்காக ஒரு வீரரால் போட்டிகளில் விளையாட முடியாமல் போகுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. ரகு சர்மாவை பயன்படுத்திப் பார்ப்பதற்காக மும்பை இந்தியன்ஸ் அணி இவ்வாறு செய்கிறதா எனவும் சில ரசிகர்கள் தங்கள் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.