மும்பை: 2020ஆம் ஆண்டுக்கு பின் மும்பை அணியால் ஒரு முறை கூட ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற முடியவில்லை. இதன் காரணமாக ரோஹித் சர்மாவை கேப்டன்சியில் இருந்து நீக்கியதோடு, ஹர்திக் பாண்டியாவையும் மீண்டும் அணிக்குள் கொண்டு வந்தது. ஆனாலும் மும்பை அணி கடந்த ஐபிஎல் சீசனில் கடைசி இடத்தில் தான் முடித்தது.
இதற்கு மும்பை அணியில் பொல்லார்ட் இடத்தை நிரப்ப முடியாமல் இருப்பதே காரணமாக அமைந்துள்ளது. ஏனென்றால் எந்த சூழலில் இருந்தும் போட்டியை தலைகீழாக மாற்றும் திறமை கொண்டவர் பொல்லார்ட். இதற்காக டிம் டேவிட்-ஐ அந்த இடத்திற்கு கொண்டு வந்த போதும், அவரால் வெற்றிகளை தேடி கொடுக்க முடியவில்லை.

இதனிடையே கடந்த சீசனில் பஞ்சாப் அணிக்காக ஆடிய அஷுதோஷ் சர்மாவின் செயல்பாடுகள் பலரையும் வியக்க வைத்தது. 11 போட்டிகளில் விளையாடி 189 ரன்களை விளாசி அசத்தியிருந்தார். அதேபோல் மும்பை அணிக்கு எதிரான போட்டியின் போது பரிதாபமான நிலைமையில் பஞ்சாப் அணி இருந்தது. ஆனால் அஷுதோஷ் சர்மா அதிரடியால் ஒரு கட்டத்தில் அம்பானி குடும்பமே ஆச்சரியமடைந்தது.
பும்ராவின் பந்தில் கூட ஸ்வீப் ஷாட் மூலம் சிக்ஸ் அடித்து மிரள வைத்தார். அந்த போட்டியில் பஞ்சாப் அணி தோல்வியடைந்தாலும், ஆனந்த அம்பானி அவருடன் நீண்ட நேரம் பேசி பாராட்டினார். இந்த நிலையில் உள்ளூர் கிரிக்கெட்டில் அஷுதோஷ் சர்மா தொடர்ச்சியாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மெகா ஏலம் வருவதால், பஞ்சாப் அணி எந்தெந்த வீரர்களை தக்க வைக்கும் என்று தெரியவில்லை.
அதேபோல் ரூ.16 கோடி கொடுத்து தக்க வைக்கும் அளவிற்கான வீரர்களும் அந்த அணியில் இல்லை. இதனால் பஞ்சாப் அணியில் அர்ஷ்தீப் சிங்கை தவிர்த்து மற்ற அனைவரும் விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பஞ்சாப் அணி இளம் வீரரான அஷுதோஷ் சர்மாவை விடுவிப்பதற்காக மும்பை அணி காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒருவேளை அஷுதோஷ் சர்மாவை பஞ்சாப் அணி விடுவிக்கும் பட்சத்தில் நிச்சயம் ஏலத்தில் அவரை வாங்குவதற்கு பல்வேறு அணிகளும் தீவிரமாக முயற்சிப்பார்கள். ஃபினிஷர் ரோலில் ஆடக் கூடிய பேட்ஸ்மேன் என்பதால், பெரிய தொகைக்கு செல்வார் என்று கூறப்படுகிறது. இதனால் அஷுதோஷ் சர்மாவை வாங்குவதற்கு மும்பை அணி நிர்வாகம் தீவிரமாக திட்டமிடும் என்று தெரிய வந்துள்ளது.