For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2025: பிளே ஆஃப் செல்லப் போகும் 4 அணிகள் இதுதான்.. வாய்ப்பை இழக்கப் போகும் 4 அணிகள் எவை?

மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் இதுவரை 44 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் தலா எட்டு போட்டிகளில் விளையாடி உள்ளன. மற்ற எட்டு அணிகளும் தலா ஒன்பது போட்டிகளில் விளையாடி முடித்துள்ளன. இந்த நிலையில் எந்தெந்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது, எந்த அணிகள் பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழக்கும் நிலையில் உள்ளன என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

தற்போதைய சூழ்நிலையில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் வலுவாக உள்ளன. ஏனெனில், அந்த இரண்டு அணிகளும் 8 போட்டிகளில் மட்டுமே விளையாடி 6 வெற்றிகளை பெற்று இருக்கின்றன. இரண்டு தோல்விகளை மட்டுமே சந்தித்து உள்ளன. அந்த இரண்டு அணிகளும் 12 புள்ளிகள் பெற்றுள்ளன. மீதமுள்ள ஆறு போட்டிகளில் இன்னும் இரண்டு வெற்றிகளை பெற்று விட்டாலே அந்த இரண்டு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது உறுதியாகிவிடும். எனவே, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் பிளே ஆஃப் செல்வது 90 சதவீதம் உறுதியாகி இருக்கிறது. அடுத்து வரும் ஆறு போட்டிகளிலும் அந்த அணிகள் மோசமாக சொதப்பினால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பை இழக்கும் நிலை வரும். ஆனால் அதற்கான சாத்தியம் மிக, மிக குறைவாகவே உள்ளது.

IPL 2025 IPL IPL Points Table mumbai indians

மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தைப் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு நான்கு அணிகள் போட்டி போடுகின்றன. மூன்றாவது இடத்தில் இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (9 போட்டிகளில் 6 வெற்றி, 12 புள்ளிகள்), நான்காவது இடத்தில் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் (9 போட்டிகளில் 5 வெற்றி, 11 புள்ளிகள்), ஐந்தாவது இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் (9 போட்டிகளில் 5 வெற்றி, 10 புள்ளிகள்) மற்றும் ஆறாவது இடத்தில் இருக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (9 போட்டிகளில் 5 வெற்றி, 10 புள்ளிகள்) ஆகிய நான்கு அணிகளும் இந்த ஆண்டு கலவையான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருந்தாலும், போட்டியை வென்று கொடுக்கும் சிறந்த வீரர்கள் இருப்பதால் இந்த நான்கு அணிகளுக்கும் பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.

இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை தான் நம்ப முடியாது. அந்த அணி புதிய கேப்டன் ரஜத் படிதார் தலைமையில் நன்றாக விளையாடி வந்தாலும் கடந்த காலங்களில் புள்ளி பட்டியலில் நல்ல நிலையில் இருந்த போதும் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. இந்த ஆண்டு ரஜத் படிதார் கேப்டன்சியில் இதுவரை அந்த அணி சிறப்பாகவே செயல்பட்டு வந்துள்ளது. அந்த அணி 9 போட்டிகளில் 6 வெற்றிகளை பெற்று இருக்கிறது. இன்னும் ஐந்து போட்டிகள் மீதம் உள்ளன. அதில் இரண்டு வெற்றிகளை பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில், அதிரடியான பேட்டிங்கால் இதுவரை 9 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்று இருக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டதால் அந்த அணி ஒரு புள்ளி மட்டுமே பெற்றது. இது அந்த அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கான கடைசி நேரத்தில் சிக்கலை ஏற்படுத்துமா? என்ற சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது.

ஏனெனில், தற்போது பஞ்சாப் அணி 9 போட்டிகளில் 5 வெற்றிகள் என 11 புள்ளிகள் உடன் உள்ளது. ஒருவேளை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்று இருந்தால் 12 புள்ளிகளை பெற்று இருக்கலாம். அந்த ஒரு புள்ளி பாதிப்பை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எனினும், இந்த அணி தனக்கு மீதம் உள்ள ஐந்து போட்டிகளில் இன்னும் மூன்று வெற்றிகளை பெற்றால் உறுதியாக பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும்.

ஐந்தாவது இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி தான் விளையாடிய கடைசி நான்கு போட்டிகளில் வெற்றிகளை சந்தித்துள்ளது. முதல் 5 போட்டிகளில் ஒரு வெற்றியையும், கடைசி நான்கு போட்டிகளில் நான்கு வெற்றிகளையும் பெற்று மொத்தம் ஒன்பது போட்டிகளில் ஐந்து வெற்றிகள் உடன் 10 புள்ளிகளை பெற்று இருக்கிறது. தனக்கு மீதம் உள்ள ஐந்து போட்டிகளில் மூன்று வெற்றிகளை பெற வேண்டிய நிலையில் உள்ளது மும்பை இந்தியன்ஸ். இது சற்று சிக்கலானது தான் என்றாலும், அந்த அணி கடந்த காலங்களில் முதல் பாதியில் மோசமாக விளையாடிவிட்டு இரண்டாவது பாதியில் சிறப்பாக விளையாடி பிளே ஆஃப் சுற்றுக்கு சென்று இருக்கிறது.

மேலும் ஐந்து கோப்பைகளை வென்ற அணி என்பதாலும், இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் நட்சத்திர வீரர்களை கொண்ட அணியாக இருப்பதாலும், நிச்சயமாக மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனால் ஐந்து போட்டிகளில் மூன்று தோல்விகளை சந்தித்தால் மும்பை இந்தியன்ஸ் பிளே ஆஃப் க்கு செல்ல முடியாது.

இதே நிலைதான் ஆறாவது இடத்தில் இருக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கும் உள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் கேப்டன் ரிஷப் பண்ட் சரியாக பேட்டிங் செய்யவில்லை என்ற சிக்கல் உள்ளது. கேப்டன் சரியாக விளையாடாத அணி எப்போது வேண்டுமானாலும் சறுக்கல்களை சந்திக்கலாம் என்பதால், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் சற்று சிக்கலாக உள்ளது.

ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தில் இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (9 போட்டிகளில் 3 வெற்றி, 7 புள்ளிகள்) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (9 போட்டிகளில் 3 வெற்றி, 6 புள்ளிகள்) அணிகள் தங்களுக்கு மீதம் இருக்கும் ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் உள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மழையால் கைவிடப்பட்ட ஒரு போட்டியில் கிடைத்த ஒரு புள்ளியுடன் 7 புள்ளிகளை பெற்றிருக்கிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 3 வெற்றிகளை மட்டும் பெற்று 6 புள்ளிகளுடன் உள்ளது. இந்த இரண்டு அணிகளும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறும் நிலையில் இல்லை. அந்த அணிகளில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இன்னும் நிரந்தரமான பிளேயிங் லெவனை அடையாளம் காணவில்லை. சுனில் நரேன், ஆண்ட்ரே ரசல், வருண் சக்கரவர்த்தி என தங்களின் பழைய வீரர்களை மட்டுமே சார்ந்து இருக்கிறது. அவர்களின் செயல்பாடும் திருப்திகரமாக இல்லை. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதிரடி ஆட்டம் ஆடுவோம் என வியூகத்தை அமைத்திருந்தாலும், இதுவரை அந்த வியூகம் அந்த அணிக்கு வெற்றிகளை வழங்கவில்லை. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஊசலாட்டத்தை சந்தித்து வரும் நிலையில், அதிலிருந்து மீண்டு அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெறுமா என்பது சந்தேகமே.

கடைசி இரண்டு இடங்களில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் (9 போட்டிகளில் 2 வெற்றி, 4 புள்ளிகள்) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (9 போட்டிகளில் 2 வெற்றி, 4 புள்ளிகள்) அணிகள் 9 போட்டிகளில் இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்று நான்கு புள்ளிகள் உடன் உள்ளன. அந்த அணிகள் தங்களுக்கு மீதம் இருக்கும் ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் அதிகபட்சமாக 14 புள்ளிகளை மட்டுமே பெற முடியும். இந்த ஆண்டு மற்ற அணிகள் அதிக புள்ளிகளை பெறுவதற்கான சாத்தியம் இருப்பதால், இந்த இரண்டு அணிகளும் 14 புள்ளிகளை பெற்றாலும் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வது சாத்தியம் இல்லாத நிலையாகவே இருக்கும். எனவே ராஜஸ்தான் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 2025 ஐபிஎல் தொடர் முடிவுக்கு வந்து விட்டதாகவே நாம் கருதலாம்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் தங்களுக்கு மீதமுள்ள 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறினால் அது ஐபிஎல் தொடரின் வரலாற்றில் பதிக்கத்தக்க நிகழ்வாக இருக்கும். இதை தவிர்த்து பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கு சாத்தியமுள்ள நான்கு அணிகள் எவை என்று பார்த்தால், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய மூன்று அணிகளுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அல்லது மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரண்டு அணிகளில் ஒன்று பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. இந்த இரண்டு அணிகளும் சொதப்பினால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும்.

Story first published: Sunday, April 27, 2025, 14:11 [IST]
Other articles published on Apr 27, 2025
English summary
IPL 2025 Playoff Analysis: Chances for all 10 teams after 44 matches
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+