Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2025: பிளே ஆஃப் செல்லப் போகும் 4 அணிகள் இதுதான்.. RCB, MI அணிகளுக்கு அடித்த ஜாக்பாட்

மும்பை: 2025 ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு எந்தெந்த அணிகள் முன்னேறும் என்பது குறித்து, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான 49வது லீக் போட்டியின் முடிவில் புள்ளிப் பட்டியல் நிலவரத்தை வைத்துப் பார்க்கலாம். இந்த ஆண்டு இதுவரை 49 போட்டிகள் முடிவடைந்துள்ளன. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரண்டு அணிகளைத் தவிர மற்ற அணிகள் அனைத்தும் தலா 10 போட்டிகளில் விளையாடியுள்ளன. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் தலா 9 போட்டிகளில் விளையாடியுள்ளன.

இதன் முடிவில் புள்ளிப் பட்டியலில் யாரும் எதிர்பாராத வகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி தான் விளையாடிய 10 போட்டிகளில் 7 வெற்றிகளைப் பதிவு செய்து 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்த ஆண்டு இதுவரை விளையாடிய அணிகளில் அதிக வெற்றிகளைப் பெற்ற அணியாகவும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி உள்ளது.

IPL 2025 Playoff Race Heats Up Points Table Analysis After 49 Matches

அந்த அணி தனக்கு மீதமுள்ள 4 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றாலும் தனது பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துவிடும். மேலும், மீதமுள்ள நான்கு போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றாலும், புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. அப்படி இடம்பெற்றால் பிளே ஆஃப் சுற்றில் இரண்டு முறை தகுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி உள்ளது. அந்த அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகள், 3 தோல்விகள் மற்றும் ஒரு போட்டி முடிவு இல்லாமல் முடிந்ததால் மொத்தம் 13 புள்ளிகளுடன் உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் இந்த முன்னேற்றமும் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

மூன்றாவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி அன்று மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருந்தது. ஆனால், தற்போது அந்த அணியும் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு அதிரடியாக முன்னேறியுள்ளது. அந்த அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகள் மற்றும் 4 தோல்விகளைச் சந்தித்துள்ளது. மொத்தம் 12 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இன்னும் 4 போட்டிகள் மீதம் உள்ளன. அவற்றில் 2 வெற்றிகளைப் பெற்றால் அந்த அணி 16 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடும். அந்த அணியும் முதல் இரண்டு இடங்களில் இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி தனது முந்தைய ஆட்ட வியூகத்தைப் பின்பற்றி வருகிறது, அதாவது ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் அதிக தோல்விகளைச் சந்தித்து, அதன் பின் இரண்டாவது பாதியில் வரிசையாக வெற்றிகளைப் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வியூகத்தை பின்பற்றி வருகிறது. மும்பை இந்தியன்ஸ் கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை அபாரமாக விளையாடி வந்துள்ளது. அந்த அணி 9 போட்டிகளில் 6 வெற்றிகளைப் பெற்றிருக்கிறது. மொத்தம் 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. இன்னும் 10வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடவில்லை என்பதால் தான் இப்போது நான்காவது இடத்தில் உள்ளது. ஒருவேளை தனது 10வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை முந்தி முதலிடத்தில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் தோல்வியடைந்தால், நான்காவது அல்லது ஐந்தாவது இடத்தில் தான் இடம்பெறும்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் அதிக ஆதிக்கம் செலுத்தியது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. ஆனால், தற்போது தான் விளையாடிய கடைசி 4 போட்டிகளில் 3 தோல்விகளைச் சந்தித்து தடுமாறி வருகிறது டெல்லி கேப்பிடல்ஸ் அணி. அந்த அணி தற்போது புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. தான் விளையாடிய 10 போட்டிகளில் 6 வெற்றிகள் மற்றும் 4 தோல்விகளைச் சந்தித்து 12 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் தலா 12 புள்ளிகள் பெற்றிருந்தாலும், நெட் ரன் ரேட் அடிப்படையில் 3, 4 மற்றும் 5வது இடங்களில் உள்ளன.

ஆறாவது இடத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி உள்ளது. அந்த அணி 10 போட்டிகளில் சரிசமமாக 5 வெற்றி மற்றும் 5 தோல்விகளைச் சந்தித்திருக்கிறது. மொத்தம் 10 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் இருக்கிறது. தற்போது அந்த அணியின் நெட் ரன் ரேட் -0.325 என்பதாக உள்ளது. இது அந்த அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவதற்குச் சிக்கலை ஏற்படுத்தலாம். இனிவரும் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 போட்டிகளில் 4 வெற்றிகள் மற்றும் 5 தோல்விகளுடன் 9 புள்ளிகளைப் பெற்று ஏழாவது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டதால் அந்த அணிக்கு ஒரு புள்ளி கிடைத்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனக்கு மீதமுள்ள 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால், அது நடக்குமா என்ற சந்தேகம் உள்ளது. அந்த அணியில் சரியான பிளேயிங் லெவன் இன்னும் அமையவில்லை. பல முன்னணி வீரர்களும் இதுவரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு விளையாடவில்லை. இது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 போட்டிகளில் 3 வெற்றிகள் மற்றும் 7 தோல்விகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளது. அந்த அணி தனக்கு மீதமுள்ள 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றாலும் அதிகபட்சமாக 14 புள்ளிகளை மட்டுமே பெற முடியும். அதை வைத்துக்கொண்டு இந்த ஆண்டு பிளே ஆஃப் சுற்றுக்குச் செல்ல முடியாது எனக் கூறப்படுகிறது. ஏனெனில், மற்ற அணிகள் அதிக புள்ளிகளுடன் உள்ளன. முதல் ஐந்து இடங்களில் இருக்கும் அணிகள் இன்னும் இரண்டு வெற்றிகளைப் பெற்றாலே பிளே ஆஃப் சுற்றுவது தகுதி பெறும் நிலையில் உள்ளன. அந்த அணிகளுக்கு இடையே அதிக போட்டி நிலவும். அந்த வகையில் பார்த்தால், அதிகபட்சம் 14 புள்ளிகளைப் பெறும் வாய்ப்புள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு கிடைப்பது கடினம்.

அதேபோல சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 போட்டிகளில் 6 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. அந்த அணி தனக்கு மீதமுள்ள 5 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். மேலும், அதிக வித்தியாசத்திலும் வெற்றிகளை பெற வேண்டும். ஏனெனில் அந்த அணியின் நெட் ரன் ரேட் -1.103 என்பதாக உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது தோல்விப் பாதையில் இருந்து மீளுமா என்பது உறுதியாக சொல்ல முடியாத நிலையே உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பிளே ஆஃப் வாய்ப்பும் மிகவும் சிக்கலானதாக இருக்கிறது.

கடைசி (10வது) இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த ஆண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த முதல் அணியாக உள்ளது. அந்த அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகள் மட்டுமே பெற்றிருக்கிறது. 8 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. சிஎஸ்கே அணி தனக்கு மீதமுள்ள 4 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் அதிகபட்சமாக 12 புள்ளிகளை மட்டுமே பெற முடியும். அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த அணியாக உள்ளது.

Story first published: Thursday, May 1, 2025, 13:06 [IST]
Other articles published on May 1, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+