MI sv PBKS: மும்பை இந்தியன்ஸ்-க்கு எதிராக எந்த அணியும் செய்யாத சேஸிங் சாதனையை செய்த பஞ்சாப் கிங்ஸ்
அகமதாபாத்: 2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பிளேஆஃப் சுற்றில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்ற நிலையில், இது மாபெரும் வரலாற்று சாதனையாக மாறி உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இதுவரை எந்த ஒரு அணியும் 200 ரன்கள் சேசிங் செய்து வென்றதில்லை.
இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் தொடரில் வலிமையான பந்துவீச்சைக் கொண்ட அணியாக இருந்து வந்தது. அந்த வலிமையான பந்துவீச்சை உடைத்திருக்கிறது பஞ்சாப் கிங்ஸ் அணி. ஐபிஎல் வரலாற்றிலேயே முதன்முறையாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 200 ரன்களுக்கும் அதிகமான இலக்கை துரத்தி சாதனை படைத்திருக்கிறது.

ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. அகமதாபாத் மைதானத்தில் 200 ரன்கள் என்பதை எளிதாக எட்டலாம் என்ற நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணி அதற்கான முயற்சி செய்து களமிறங்கியது.
பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக ஆடினார். ஜோஸ் இங்கிலிஸ் 21 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார். அதன் பிறகு நெஹால் வதேரா 29 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார். அவர்கள் இருவரும் ஆட்டமிழந்த நிலையிலும், மறுபுறம் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக ஆடி வந்தார். அவர் 41 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தார். 212.2 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் மிரட்டலான ஆட்டத்தை ஆடியிருந்தார் ஸ்ரேயாஸ் ஐயர்.
இதை அடுத்து, 19 ஓவர்களில் எல்லாம் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. 204 ரன்கள் என்ற இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதன்முறையாக 200 ரன்கள் என்ற இலக்கை எட்டிய அணியாக சாதனை செய்தது பஞ்சாப்.
மேலும், ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக முறை 200 ரன்களுக்கும் அதிகமான ஸ்கோர்களை சேசிங் செய்து வென்ற அணி என்ற சாதனையை பஞ்சாப் கிங்ஸ் அணி படைத்தது. இந்த வெற்றியுடன் சேர்த்து மொத்தம் எட்டு முறை 200 ரன்களுக்கும் அதிகமான ஸ்கோர்களை பஞ்சாப் கிங்ஸ் அணி சேசிங் செய்துள்ளது.
மேலும், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இது ஒன்பதாவது 200 ரன்களுக்கும் அதிகமான இலக்கை நோக்கிய வெற்றிகரமான சேசிங் ஆக அமைந்தது. இதுவே ஐபிஎல் வரலாற்றில் ஒரே சீசனில் அதிக முறை 200 ரன்களுக்கும் அதிகமான ஸ்கோர்கள் சேசிங் செய்யப்பட்ட சாதனையாகும்.


Click it and Unblock the Notifications