மும்பை: 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் ரோஹித் சர்மா பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக சிலர் கூறி வருகின்றனர். அதிலும் அவர் ஏலத்தில் பங்கேற்றால் அவருக்காக 50 கோடி ரூபாயை ஏலம் கேட்க லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகள் தயாராக இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
ஆனால் அஸ்வின் இதுபற்றி பேசுகையில் அவ்வளவு தொகை எல்லாம் ரோஹித் சர்மாவுக்கு கிடைக்காது என சூசகமாக உணர்த்தி இருக்கிறார். 2024 ஐபிஎல் தொடரின் போது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியை இழந்தார் ரோஹித் சர்மா. அதன் பின் அவர் இந்திய அணியின் கேப்டனாக 2024 டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்தார்.

இந்த நிலையில், அவர் மீண்டும் 2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு வீரராக மட்டும் தொடர்வாரா? என்ற கேள்வி உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி அவருக்கு மீண்டும் கேப்டன் பதவியை அளிக்கவில்லை என்றால் அவர் அந்த அணியில் இருந்து விலகி, 2025 ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.
அப்படி அவர் ஏலத்தில் பங்கேற்றால் இதுவரை ஐபிஎல் கோப்பை வெல்லாத டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் அவரை ஏலத்தில் வாங்க போட்டி போடும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ரோஹித் சர்மாவுக்காக அந்த அணிகள் 50 கோடி வரை போட்டி போட்டு ஏலம் கேட்கும் எனவும் கூறப்பட்டது.
ரவிச்சந்திரன் அஸ்வின் இது பற்றி பேசுகையில், "ரோஹித் சர்மாவுக்கு 20 கோடி வரை ஏலம் கேட்கப்படும். அவருக்காக 20 கோடி நிச்சயமாக ஒரு அணியின் கையில் இருந்து மாயமாக மறைந்துவிடும்." என்றார். அதன்படி ரோஹித் சர்மாவுக்கு அதிகபட்சமாக 20 கோடி வரை மட்டுமே ஏலம் கேட்கப்படும் என அஸ்வின் கூறி இருக்கிறார்.
ரோஹித் சர்மாவை வாங்கும் பணி நிச்சயமாக அவரை அணியின் கேப்டனாகவே நியமிக்கும். மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மாவுக்கு கேப்டன் பதவியை அளித்தால் அவர் அந்த அணியிலேயே தொடரவும் வாய்ப்பு உள்ளது.