முல்லான்பூர்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில், தனது வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணா மீது கோபமடைந்தது விவாதப்பொருளாகியுள்ளது. அதன் காரணமாக பிரசித் பதற்றம் அடைந்ததால் அந்த ஒரு ஓவரில் மட்டும் மும்பை இந்தியன்ஸ் வீரர் ஜானி பேர்ஸ்டோ 26 ரன்கள் குவித்தார்.
பிரசித் கிருஷ்ணா வீசிய ஓவரின் முதல் பந்தில் ஜானி பேர்ஸ்டோ சிக்ஸ் அடித்ததால், சுப்மன் கில் அவரைத் திட்டினார். ஆனால், அந்த ஓவரில் பிரசித் கிருஷ்ணா மொத்தமாக 26 ரன்களை வாரி இறைத்து அதிர்ச்சி அளித்தார்.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, துவக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோ மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் களமிறங்கினர். ரோஹித் சர்மா கொடுத்த இரண்டு கேட்சுகளை குஜராத் டைட்டன்ஸ் அணி தவறவிட்டது. அவர் அதிரடியாக ஆடி 50 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்தார். மறுபுறம், ஜானி பேர்ஸ்டோ இந்தப் போட்டியில்தான் இந்த ஆண்டு ஐபிஎல்லில் முதல் முறையாக விளையாடினார்.
இந்த ஆண்டில் தனது முதல் போட்டியிலேயே அதிரடியாக ஆடிய ஜானி பேர்ஸ்டோ, பிரசித் கிருஷ்ணா வீசிய நான்காவது ஓவரில் உச்சகட்டத்தை எட்டினார். அந்த ஓவரின் முதல் பந்தில் சிக்ஸ் அடித்த அவர், அடுத்த பந்தில் பவுண்டரி அடித்தார். முதல் பந்தின் முடிவிலேயே சுப்மன் கில், பிரசித் கிருஷ்ணாவை பார்த்துத் திட்டினார்.
ஆனால், இது போன்ற கோபத்தை காட்டும் கேப்டன்சி நிலைமையை இன்னும் மோசமாக்கியது. பிரசித் கிருஷ்ணா மேலும் பதற்றம் அடைந்து, பந்துகளை தவறாக வீசினார். அந்த ஓவரில் மூன்று சிக்ஸர்கள் மற்றும் இரண்டு பவுண்டரிகள் அடிக்கப்பட்டன. மொத்தம் 26 ரன்கள் ஜானி பேர்ஸ்டோவால் சேர்க்கப்பட்டன.
பின்னர், இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் எடுத்தது. பிரசித் கிருஷ்ணா இந்தப் போட்டியில் அதிக ரன்களை வாரி இறைத்த வீரராக இருந்தார். நான்கு ஓவர்களில் 53 ரன்களை விட்டுக் கொடுத்த அவர், இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தார்.
பின்னர் 229 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 208 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.