மும்பை: ஐபிஎல் மெகா ஏலம் நடக்கவுள்ள நிலையில், ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டம் முடிவடைந்த பின், பல்வேறு தரப்பில் ஏராளமான கருத்துகள் பெறப்பட்டன. இதனடிப்படையில் பிசிசிஐ தரப்பில் பல்வேறு விதிமுறைகள் கொண்டு வரப்படவுள்ளன.
இதனிடையே கடந்த சீசனிலேயே மும்பை அணியில் ஹர்திக் பாண்டியாவின் வரவை ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் திலக் வர்மா உள்ளிட்டோர் ஏற்கவில்லை. தற்போது ரோஹித் சர்மாவுக்கு பின் இந்திய அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் பொறுப்பேற்றுள்ளார். இதனால் சூர்யகுமார் யாதவ் மும்பை அணியின் கேப்டன்சியை கோரியுள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் கடந்த சீசனில் ரூ.7 கோடிக்கு சூர்யகுமார் யாதவ் தக்க வைக்க ஒப்புக் கொண்டார். இருந்தாலும் மும்பை அணி அவருக்கு உரிய மரியாதையை அளிக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த சீசனில் தனக்கான ஒப்பந்தத்தை மும்பை அணி நிர்வாகத்திடம் தெளிவாக கூறியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
குறிப்பாக மும்பை அணியின் கேப்டன்சியை சூர்யகுமார் யாதவ் கேட்டுள்ளார். அதனை ஏற்க முடியாததால், சூர்யகுமார் யாதவை விடுவிக்க மும்பை அணி நிர்வாகம் முடிவு எடுத்திருக்கிறது. இருப்பினும் இன்னொரு வாய்ப்பாக மற்ற அணிகளிடம் ட்ரேட் செய்ய முடியுமா என்பதையும் மும்பை அணி பார்த்து வருகிறது. கடந்த முறை ஹர்திக் பாண்டியாவை அப்படிதான் குஜராத் அணியிடம் இருந்து பெற்று கொண்டது.
இம்முறை மும்பை அணி நிர்வாகம் தரப்பில் கேகேஆர் அணியின் உதவியை நாடியுள்ளது. அதாவது சூர்யகுமார் யாதவிற்கு பதிலாக கேகேஆர் அணியின் கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயர் ட்ரேட் செய்யலாம் என்று கோரிக்கை வைத்துள்ளது. ஸ்ரேயாஸ் ஐயரும் மும்பை வீரர் என்பதால், மும்பை அணிக்கு கூடுதல் உதவியாக இருக்கும்.
ஆனால் சாம்பியன்ஷிப் வென்று கொடுத்த கேப்டனை கேகேஆர் அணி விட்டுக் கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கேகேஆர் அணி தரப்பில் சூர்யகுமார் யாதவிற்கு மிகப்பெரிய சலுகை ஒன்று அளிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. கேகேஆர் அணியின் கேப்டன்சி பதவியுடன் சேர்த்து விளம்பர ஒப்பந்தங்கள் உள்ளிட்டவையும் அளிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஏற்கனவே ஹர்திக் பாண்டியாவை ரூ.115 கோடி கொடுத்து மும்பை அணி வாங்கியிருப்பதால், ஸ்ரேயாஸ் ஐயரை வாங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. மேலும் சூர்யகுமார் யாதவ் ஏற்கனவே கேகேஆர் அணிக்காக விளையாடி இருக்கிறார். இந்திய அணியின் கேப்டன் கேகேஆர் அணிக்கும் கேப்டனாக இருந்தால், தங்களின் பிராண்ட் வேல்யூ கூடும் என்று கேகேஆர் உரிமையாளர்கள் கணித்துள்ளனர்.