IPL 2025: உலக டி20யில் பிரம்மாண்ட மைல்கல் சாதனை செய்த சூர்யகுமார் யாதவ்.. அதிவேக 8000 ரன்கள்
மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி வீரரான சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் பெரிய சாதனை ஒன்றை செய்திருக்கிறார். ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் அவர் 8000 ரன்களைக் கடந்துள்ளார். இந்த மைல்கல்லை விரைவாக எட்டிய இந்திய வீரர் என்ற சாதனையை செய்துள்ளார்.
மேலும், சர்வதேச அளவில் இந்த மைல்கல்லை விரைவாக எட்டிய பேட்ஸ்மேன்கள் பட்டியலில் அவர் இரண்டாவது இடத்தையும் பிடித்திருக்கிறார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது அவர் 9 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்து இருந்தார். அதன் மூலம் இந்த மைல்கல்லை எட்டினார்.

சூர்யகுமார் யாதவ் இதுவரை சர்வதேச டி20 போட்டிகளில் 2598 ரன்களையும் சேர்த்து இருக்கிறார். ஐபிஎல் போட்டிகளில் மட்டும் 3698 ரன்கள் சேர்த்து இருக்கிறார். இது தவிர உள்ளூர் போட்டிகளிலும் அவர் ரன்களை குவித்திருக்கிறார். மொத்தமாக டி20 போட்டிகளில் 288 இன்னிங்ஸ்களில் 8007 ரன்கள் சேர்த்து இருக்கிறார். 6 சதங்கள் மற்றும் 54 அரை சதங்களும் இதில் அடங்கும்.
உலக அளவில் இந்த மைல்கல்லை விரைவாக எட்டிய டி20 பேட்ஸ்மேன் ஆண்ட்ரே ரசல். அவர் 4749 பந்துகளில் 8000 டி20 ரன்கள் கடந்தார். சூர்யகுமார் யாதவ் தற்போது 5256 பந்துகளில் இந்த மைல் கல்லை எட்டி இருக்கிறார். மேலும் இந்திய அளவில் 8000 டி20 ரன்கள் எட்டிய 5 வது வீரர் என்ற சாதனையும் செய்து இருக்கிறார்.
டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் -
12976 - விராட் கோலி
11851 - ரோஹித் சர்மா
9797 - ஷிகர் தவான்
8654 - சுரேஷ் ரெய்னா
8007 - சூர்யகுமார் யாதவ்*
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 116 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி சேஸிங் செய்த போது ரோகித் சர்மா 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். வில் ஜாக்ஸ் 16 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
ரியான் ரிக்கெல்டேன் அதிரடியாக ஆடி வந்தார். அப்போது சூர்யகுமார் யாதவ் அவருடன் இணைந்தார். ரியான் ரிக்கெல்டேன் 41 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்த நிலையில் சூர்யகுமார் யாதவ் வெறும் 9 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்து மிரட்டினார். மூன்று பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களை அடித்தார்.


Click it and Unblock the Notifications