சென்னை: வாஷிங்டன் சுந்தர் சமீபத்தில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டு இருந்தார். மொத்தம் 11 விக்கெட் வீழ்த்தி இருந்தார். அதற்கு முன் ரஞ்சி ட்ராபி போட்டியில் தமிழ்நாடு அணிக்காக ஆடி 152 ரன்கள் குவித்து இருந்தார். அதே போட்டியில் அவர் 6 விக்கெட்கள் வீழ்த்தி இருந்தார்.
அதற்கு முன் நடந்த வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் மூன்று போட்டிகளில் கட்டுக்கோப்பாக பந்து வீசி 3 விக்கெட் வீழ்த்தினார். இத்தனைக்கும் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளில் அவருக்கு தலா ஒரு ஓவர் மட்டுமே பந்து வீச வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்த ஒரு ஓவரிலும் அவர் விக்கெட் வீழ்த்தியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.

அவர் நல்ல ஃபார்மில் இருப்பதால் அவருக்கு ஐபிஎல் அணிகள் மத்தியில் மதிப்பு கூடி உள்ளது. மூன்று ஐபிஎல் அணிகள் வாஷிங்டன் சுந்தரை தொடர்பு கொண்டதாகவும், அவரை ஏலத்தில் வாங்க விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த மூன்று அணிகள் எவை? என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
முதல் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் வாஷிங்டன் சுந்தரை வாங்க ஆர்வம் காட்டி இருக்கிறது. அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணியும் அவரை வாங்க முயற்சிக்க உள்ளது. மூன்றாவதாக குஜராத் டைட்டன்ஸ் அணியும் வாஷிங்டன் சுந்தரை வாங்குவதில் ஆர்வமாக உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஏற்கனவே பல தமிழக வீரர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் அணியில் சாய் சுதர்ஷன், விஜய் சங்கர், சாய் கிஷோர் ஆகிய தமிழக வீரர்கள் இடம் பெற்று இருக்கின்றனர். அவர்களில் சிலரை ஏலத்துக்கு முன் விடுவிக்க வேண்டிய நிலையில் குஜராத் அணி உள்ளது. இந்த நிலையில் ஏலத்தில் வாஷிங்டன் சுந்தரரை அந்த அணி வாங்க முயற்சிக்கும் என தெரிகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்போதும் தமிழகத்தை சேர்ந்த வீரர்களை வாங்குவதில் ஆர்வம் காட்டாது என சொல்லப்பட்டு வரும் நிலையில் தற்போது வாஷிங்டன் சுந்தரை வாங்குவதில் சிஎஸ்கே அணி அதிக ஆர்வத்துடன் உள்ளது. வாஷிங்டன் சுந்தரை வாங்குவதில் ஏலத்தில் கடும் போட்டி இருக்கும். எனவே அவருக்கு அதிக தொகை சம்பளமாக கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.